Posts tagged ‘புலிகள்’

ஜுனியர் விகடன் + திருமாவளவன் = முள்வலி பார்ட்-2 ?

கடந்த ஆண்டு ஜூனியர் விகடன் படிக்கும் போதெல்லாம் புல்லரிக்கும். ஈழப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதில் வரும் செய்திகளும், படங்களும், பேட்டிகளும் அதை வாங்க வைத்தன. குறிப்பாக தலைவர் பிரபாகரன் படம் போட்ட எந்தப் பத்திரிகையானாலும் வாங்கித் தொலைத்தேன். இதெல்லாம் இணைய தளங்களில் வரும் செய்தி, ஆய்வுக் கட்டுரை என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு தாங்களே செய்தியாளர்களை அங்கே அனுப்பி போரின் உண்மை நிலவரத்தைக் கண்டு வந்தது போல எழுதுகிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.

போர் முடிந்துவிட்டது. ஈழம் தகர்ந்துவிட்டது. ஆனால் பத்திரிகைகளின் சர்குலேசனை அப்படியே வைத்திருக்க அவ்வப்போது ஈழம் என்ற ஊறுகாய் தேவைப்படுகிறது. தமிழ் மசாலாப் படங்களுக்கு ஐட்டம் நம்பர் குத்தாட்டப் பாடல் தேவைப்படுவது போல தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு ஈழத் தமிழரின் இன்னல்கள் தேவை. செய்தியை செய்தியாக அளித்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை ஒரு திரைக்கதையாகத் தருவதைத்தான் தாங்க முடியவில்லை.

ஆனந்த விகடனைப் பொருத்தவரை பிரபாகரன் இருக்கிறார். ஆனால் ஜூ.வி.யைப் பொருத்தவரை தலைவர் இல்லை. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இருக்கிறார் என்பார்கள். விசயத்துக்கு வருவோம்.

திருமாவளவன் தமிழ் உணர்வு ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். காங்கிரஸை ஒழிப்போம் என்பார். அப்புறம் அதன் பின்னாலேயே நிற்பார். அது சரி அதை ஏன் குறை சொல்ல வேண்டும்? இந்தியாவில் ராஜபட்சே பரம எதிரி. இலங்கைக்குச் சென்றால் கூடிக் குழாவும் அளவுக்கு நண்பர். முதலில் நான் எழுதிய ஒரு பதிவில் திருமாவளவனை யாரும் திட்ட வேண்டியதில்லை என்று ராஜபட்ச-திருமாவளவன் சந்திப்பு பற்றி்க் கூறினேன். ஆனால் இப்போது அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இவர் விருப்பத்துக்கு இலங்கை செல்கிறார் அமைச்சர் இறப்பில் கலந்து கொள்கிறார். பிறகு பசில், கோத்தாவுடன் பேசி தலைவரின் பெற்றோரை மீட்கப் பேசுகிறார். ஒரு வேளை இவரும்….. வேண்டாம். எதற்கு வீண் கற்பனை.

முதலில் எம்.பி.கள் குழுவுடன் இலங்கை சென்று வந்ததை பேட்டியாக ஜூ.வி.யில் கொடுத்தார். பிறகு அதையே கொஞ்சம் தனது எழுத்தாற்றலை வைத்து கதையாக எழுதினார். கொஞ்ச வாரம் அதை தொடராக எழுதினார்கள். பிறகு அதை முள்வலி என்ற பெயரில் புத்தகமாக அச்சடித்து விற்பனை செய்கிறார்கள். ஈழம் தொடர்பாக இன்னுமொரு வியாபார புத்தகம். இன்னும் கொஞ்ச நாளில் சுய முன்னேற்ற நூல்கள் வியாபாரம் போல் ஈழம் தொடர்பான புத்தக வியாபாரமும் செழிக்கும் போல் இருக்கிறது. திருமாவளவன் போன்றவர்கள் இருக்கும்போது என்ன கவலை?

இப்போது தலைவரின் தந்தை மரணத்துக்குச் சென்று வந்த பிறகு அங்கு தலைவரின் தாயிடம் பேசியதை பேட்டியாகக் கொடுக்கிறார் ஜு.வி.க்கு. முதலில் தலைப்பைப் பாருங்கள். தம்பி உயிரோடு இருக்கிறார். கனடாவில் சந்திப்பார். இதைப் பார்த்தவுடன் நானே ஜு.வி.யை வாங்கி விட்டேன். கேள்விகளைப் படித்தால் நன்றாக இருக்கிறது. ஆனால் பதில். அங்கேதான் இவர்களது விசமம் இருக்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்தால் கேள்வியை முன்னரே கொடுத்து பிறகு அதற்கு ஒரு தேர்ந்த எழுத்தாளரைப் போல வர்ணனையுடன் பதில் எழுதிக் கொடுத்தது போல இருக்கிறது. பேட்டி என்றால் இப்படித்தான் இருக்குமா திருமாவளவன் ஐயா?

பிறகு கடைசிக் கேள்வி முடிந்ததும் அடுத்த இதழி்ல் தொடரும் என்று ஒரு வரி வருகிறது. அதற்கு அடுத்த வாரமும் வாங்கினேன். அதிலும் அடுத்த இதழில் தொடரும் என்று வருகிறது. இப்போது முள்வலி என்ற தொடர் முடிந்துவிட்டது. இப்போது பேட்டி என்ற பெயரில் மீண்டும் ஒரு தொடர் திருமாவளவனை வைத்து வருகிறது. இந்த வாரமும் அடுத்த இதழில் தொடரும் என்று வரும் என நினைக்கிறேன். ஆக, இது முள்வலி பார்ட்-2 என்ற பெயரில் மீண்டும் புத்தகமாக வெளிவருவது உறுதியாகிவிட்டது.

எனவே நாம் எல்லாம் இந்த வியாபாரத்தைச் செழிக்கச் செய்ய வேண்டுமாய் தமிழ் கூறும் நல்லுலகைக் கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி: விகடன் பற்றி தவறாக எழுதாதே என்று என் நண்பர் அறிவுறுத்தினார். தவறாக எதுவும் இல்லையே. சரியாகத் தானே எழுதுகிறேன் என்றேன் நான்.

ஜனவரி 18, 2010 at 3:48 பிற்பகல் 16 பின்னூட்டங்கள்


நல்லா சொன்னாங்க

ரகுநாதன் on கலைஞரும் தமிழுணர்வும் மானாட…
tamizhanban on கலைஞரும் தமிழுணர்வும் மானாட…
ரகுநாதன் on 13 Tzameti (french) மரண வ…
ரகுநாதன் on 13 Tzameti (french) மரண வ…
கனவுகளின் காதலன் on 13 Tzameti (french) மரண வ…

அதிகம் பேர் படித்தது

 

மே 2012
தி செ பு வி வெ ஞா
« மார்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

வந்தவர்கள்

  • 646 பார்வை

தொகுப்புகள்

வகைகள்

விருந்தினர் போற்றுதும்

wordpress stats

Follow

Get every new post delivered to your Inbox.