Archive for மார்ச், 2010

ஞாபக வெளி

காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட் ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக அவன் வந்திருந்தான். தனது வேலைகள் முடிய இன்னும் சில தினங்கள் ஆகக் கூடும் எனத் தோன்றியது. அருகில் இருந்த ஊரில்தான் அந்த பள்ளிக்கூடம் இருந்தது. வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் போது ஆசையை மந்திரங்களால் கூட அடக்க முடியாது என்று அவன் அறிந்திருந்தான். நெடுநாள் பதுங்கியிருந்த ஆவல் பாய்ந்து வெளிவரக் காத்திருந்த ஒரு மதிய வேளையில் அந்தப் பள்ளியின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான். தண்ணீருக்குள் சாயம் கரைந்து காணாமல் போவது போல வெயில் கரைந்து கொண்டிருந்தது.

எல்லாமே மாறியிருந்தது அந்தப் பள்ளியைச் சுற்றி. பல வணிக வளாகங்கள் கட்டப்பட்டு மக்கள் கூட்டம் சென்று வந்தபடி இருந்தது. சில கட்டி முடிக்கப்படவிருந்தன. ஏராளமான வீடுகள் முளைத்திருந்தன. இத்தனை கால இடைவெளியில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்திருந்தது. பள்ளிக்கூடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தனர். இரும்பு கேட் பெரிதாகப் போடப்பட்டிருந்தது.

சாலையை கடந்து தெரிந்த மரத்தடிக்குச் சென்றான். வாசலை வெயில் தீண்டாதபடி இருக்க பந்தல் போடப்பட்ட அந்தக் கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்தவனை எங்கோ முன்பே பார்த்தது போல் இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் பெஞ்சில் அமர்ந்தான். படித்துவிட்டு சுருட்டியோ அல்லது கிழித்தோ வீசுவதற்காகவே வாங்கப்பட்டது போல் காணப்பட்டது அந்தத் தாள். கையில் எடுத்து வைத்துக் கொண்டு “ஒரு டீ கொடுங்க’ என்றபடி தலைப்புகளின் மீது கண் பதித்தான்.

டீயை உறிஞ்சியபடி அப்படியே அள்ளிக் கையில் எடுத்துவிடுவது போல பள்ளிக்கூடத்தையே பார்த்தான். ஊரில் மாற்றங்கள் வந்த பின்பும் ஸ்கூல் பெரிதாக மாறிவிடவில்லை. செடிகள் மரங்களாகவும், மரங்கள் பெரிய மரங்களாகவும் காட்சியளித்தன. முன்னைக் காட்டிலும் மரங்கள் அதிகம் இருந்தன. மஞ்சள் பெயிண்ட் அடித்து பல நாள்கள் பராமரிப்பின்றி அரசுப் பள்ளிகளின் “விதி’படியே இருந்தன கட்டடங்கள் அனைத்தும். காம்பவுண்டை ஒட்டி இருந்த கட்டடம் காரை பெயர்ந்து இருந்தது. எப்போதோ எழுதப்பட்ட அரசியல் விளம்பரம் மங்கலாகத் தெரிந்தது. ஓரிருமுறை போனால் போகிறதென வெள்ளை அடித்திருக்கக் கூடும். மணல் வெளி பரந்து கிடந்தது மைதானம் எங்கும். காற்றடிக்கும் போது புழுதி பறக்கும் மணல் செந்நிறம் கொண்டு எழும்பும்.

வேர்கள் புதைந்து மேலெழும்பிச் சென்ற அந்த மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக இருந்தது. இலைகள் அகன்று நீண்டிருந்தது. கரும்பச்சை நிறத்தில் கொத்தாகத் தொங்கும் நீண்ட புழக்கள் போல காய்த்திருந்தது. அது பால மரம் என்று அவன் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான். அந்தக் காயை உடைத்தால் சிறிது சிறிதாக நழுவிக் கீழே விழும் வெண்ணிறமான பால். பச்சை வாசத்துடன் பிசுபிசுக்கும். அவன் கிராமத்தின் வேலி ஓரங்களில் அந்த மரங்கள் நிறைய உண்டு. அதில் நீண்ட பாம்பு சுருண்டு தொங்குவது போல கொடிகள் கிடக்கும். ஈக்கள் மொய்த்து புழுவேறி காய்ந்து அழியும்.

“கன்னு போட்ட பசுவோட தொப்புள் கொடி அது. இப்படி மரத்து மேல போட்டா மாட்டுல நல்லா பால் சுரக்குமாம். அதான் இப்படி போட்டிருக்கிறாங்க’ என்பாள் அம்மா.

செடியில் கொடி போட்டால் மாட்டுக்கு எப்படி பால் சுரக்கும் என்று கேட்க நினைத்ததில்லை அவன்.

சலசலத்த அதன் கிளைகளில் பெயர் தெரியாத இரு பறவைகள் கிரீச்சிட்டன. மதிய உணவு சாப்பிட்ட பின் கிடக்கும் பருக்கைகளை கூர்மையான அலகுகளால் கொத்தி மைதானத்தை சுத்தமாக்கிக் கொண்டிருந்தன காக்கைகள். அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது இப்போது கிரானைட் பலகை பதிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரு காகம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது. அந்த வேப்ப மரம் இப்போதும் அவனைப் பார்த்து தலை அசைப்பதாகத் தெரிந்தது. இத்தனை வருடங்களில் பள்ளியின் இருப்பு பெரிதாக மாறிப் போய்விடவில்லை.

மெயின் பில்டிங் முன் வட்டமான படிக்கட்டுகள் கொண்ட தளத்தின் மீது அந்தக் கட்டடத்தின் மேல் மாடி அளவுக்கு நிறுத்தப்பட்டிருந்தது கொடி மரம். அதற்கு நேரெதிரே முதல் தளத்தில் அந்த வகுப்பறை தென்பட்டது.

அந்த அறைக் கதவின் பெயிண்ட் நிறம் கூட மாறாதிருந்தது வியப்பளித்தது. வெளியில் எந்த பையனையோ, பெண்ணையோ காண முடியவில்லை. பாடம் நடந்து கொண்டிருக்கலாம். அல்லது தேர்வு நடக்க கூடும். சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டான். சைக்கிள்கள் நிறுத்தப்படும் அந்தப் பெரிய வேப்ப மரத்தின் அடியில் சைக்கிள் இல்லை. அருகே ஸ்டேண்ட் கட்டியிருந்தார்கள்.

ஒரு சைக்கிளுக்காக பட்ட அவமானம், வசவுகள் அவன் நினைவில் இருந்து உதிர்ந்தன. அப்போது கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். “அரப் பரீட்சையில நல்ல மார்க் எடுத்தா புது சைக்கிள் வாங்கித் தாரேன்’ என்று எண்ணிக்கை தெரியாத முறையாக அவன் அப்பா சொல்லி இருந்தார். சரிப்பா என்று அவன் சொன்னதை அவன் காப்பாற்றினான். ஆனால் உழைத்துக் குடித்து, குடித்து அழித்து, கடன் வாங்கி குடித்து, கடன் அடைக்க கடன் வாங்கி என்று புளியமரத்தில் சிக்கி அலைவுறும் மயிர் கற்றைகள் போல அலைவுறப் பழகியிருந்த அவன் அப்பாவால் சைக்கிள் வாங்கித் தரமுடியவில்லை. “உனக்கு எப்போ என்ன வாங்கித் தரோனும்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா சோறு தின்னயா…படிக்கப் போனயான்னு இருக்கணும். எதிர்த்து கேள்வி கேட்டியன்னா உதைதான் விழும்’ என்று இன்னபிற சொல்லில் அடங்கா வசவுகளை பல முறை கேட்ட பின் அவன் கனவில் இருந்து சைக்கிள் நழுவிச் சென்றுவிட்டது.

பரபரப்பான வாழ்க்கைக்கு பழகிவிட்ட அவன் மனம் இதுபோல் ஓரிடத்தில் நிற்காது. அவன் தொழில் அவனை அவ்வாறு பழக்கியிருந்தது. இருந்தாலும் ஸ்கூலைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தால் தன்னை மறந்து உட்கார்ந்திருந்தான். அடுக்கப்பட்ட பண்டங்களைப் பார்த்தபடி “வேறென்ன சார் வேணும்’ உள்ளிருந்து கொண்டே கேட்டான் கடைக்காரன். அதில் ஒன்றை கைகாட்டிப் பெற்றுக் கொண்டான்.

ட்ட்ட்ரிங்ங்ங்….நீண்ட மணியோசை பள்ளியின் மையக் கட்டடத்தில் இருந்து காற்றில் அலைந்து வந்தது. ஹோய் என்ற பேரிரைச்சலுடன் கடலலை வீசுவது போல மாணவர்கள் வகுப்பில் இருந்து வெளிப்பட்டனர். அதைப் பார்க்க விரும்பாதவனாக திரும்பினான். பையன்களும் பெண்களும் சிரித்துப் பேசியபடி அவன் இருந்த கடைக்கு வந்தனர். பிடித்ததை வாங்கிக் கொண்டு பேசிச் சிரித்தபடி பிரிந்து சென்றனர். ஆசிரியர்களும் ஒவ்வொருவராகச் சென்று கொண்டிருந்தனர். எல்லோரும் புதிதாக இருந்தார்கள்.

அவன் பார்வையைப் புரிந்து கொண்டான் டீ கடைக்காரன். இந்த ஆள் ஏன் பள்ளிகூடத்தையே வெறிச்சிட்டு இருக்கான் என்று நினைத்தபடி, “முன்ன மாதிரி இல்ல சார் இப்ப இருக்கிற பசங்க…நாங்க படிச்சப்போ பொண்ணுங்களோட கிளாஸ்க்குள்ள பேசறதோட சரி… வெளில முகத்தப் பாக்கவே பயப்படுவோம்..வாத்தியாருங்க மேல அவ்வளவு பயம்… ஆனா இப்ப பாருங்க… வாத்தியார் போறாரேங்கிற பயம் கூட இல்லாம நின்னு கொஞ்சிக்கிறதும் சிரிக்கிறதும்…’ என்று மைதானத்தைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டான்.

தூரத்தில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் சைக்கிளில் சாய்ந்தபடி பையன்களும் பெண்களும் ஜோடி ஜோடியாக நின்று பேசுவதை அப்போதுதான் பார்த்தான். வியப்பாக இருந்தது. இந்த தைரியத்தில் கொஞ்சம் இருந்திருந்தால் தன் வாழ்க்கை இப்படி திசை திரும்பி இருக்காது என்பது உண்மை என்று தோன்றியது.

அப்பா எந்த வேலையிலும் நிலையாக இல்லாததால் அவனது படிப்பும் ஏற்ற இறக்கம் கொண்டிருந்தது. அதனாலேயே அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லாமல் இருந்தது. ஒன்றரை வருடங்களுக்கு ஒன்று என வாடகை வீடு போல பள்ளிக்கூடம் மாற வேண்டியிருந்தது.

கடைசியாகச் சேர்ந்ததும் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் இந்த பள்ளிதான். 12-ம் வகுப்பில் ஏதோ ஒரு பாடம் நடக்கும்போது அவன் இப்பள்ளியில் சேர்ந்திருந்தான். தயக்கத்துடன் அந்த வகுப்பறை முன் நின்றான். “என்ன நியூ அட்மிஷனா? கையில் இருந்த புத்தகப்பையை பார்த்தபடி கேட்டார் ஆசிரியர். “ஆமா சார்’. உள்ள வா போய் உட்காரு. வகுப்பு அவனை வேடிக்கை பொருளாக்கியது. கடைசி டெஸ்க்கை அவர் கைகாட்டினார். “புதுசு புதுசா வரானுங்க..எப்படி படிச்சு பாஸ் பண்ணப் போறானோ…’ முனகியது காதில் விழந்தது.

அந்த டெஸ்க் காலியாக இருந்தது. இடது புறம் மாணவிகள். புதிதாகப் பார்ப்பதாலோ என்னவோ எல்லோரும் அழகாகத் தெரிந்தனர். மறுமுறை திரும்ப கூச்சமாக இருந்தது.

அடுத்த பீரியடுக்கான மணி அடித்தது. நான்கைந்து மாணவர்கள் காரிடரில் ஓடுவது தெரிந்தது. அதில் ஒருவன் வேகமாக உள்ளே வந்து அவன் அருகில் தொப்பென்று விழுந்தான். அவன் வாயில் இருந்த பாக்கின் வாசத்தையும் மீறி சிகரெட் நாற்றம் முகத்தில் அடித்தது.

“என்ன தனசேகர், மேத்ஸ் கிளாஸ் கட் அடிச்சுட்டியா’ இடது பக்கம் இருந்து பெண் குரல் கேட்டது. “யெஸ் மேடம்’ என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

“யார்ரா நீ புதுசா இருக்க?’

“நியூ அட்மிஷன்.’

“பேரென்ன?’

“சிவா…’

“சிவலிங்கமா? சிவக்குமாரா?’ கேட்டுவிட்டு சிரித்தான்.

“அதெல்லாம் இல்ல…வெறும் சிவா.’

“ஓஹோ அப்ப வெட்டி சிவா…சரி எந்த ஊரு?’. சொன்னான்.

“ஏன் அங்கெல்லாம் உனக்கு ஸ்கூல் இல்லயா?’

சிவா முறைத்தான். “என்னடா முறைக்கிற’ கையை மடக்கி ஓங்கினான் தனசேகர். “ஆளும் அவன் தலையும்’ என்று பின்னந்தலையில் பட்டென்று அடித்து “தள்ளி உட்காருடா’ என்று சொல்லிக் கொண்டே பெண்கள் பக்கம் திரும்பிச் சிரித்தான். சிரிப்பு எதிரொலித்தது. ஆத்திரமாக இருந்தது சிவாவுக்கு.

யாருடனும் பழகுவதுபோல் தெரியவில்லை. தினமும் வம்பிழுத்தான் தனசேகர். வழிதவறி வீட்டுக்குள் வந்து விட்ட பெயர் தெரியாப் பறவைபோல தவித்தான் சிவா. விளையாட கிரவுண்டுக்குச் சென்றாலும் ஒதுக்கப்பட்டான். அழுகையும் ஆத்திரமுமாக வந்தது.

அவனுக்கு மகிழ்ச்சி தரும் தருணங்கள் மாடி மேல் இருக்கும் இந்த வகுப்பறைக்கு வரும் வழிதான். கருங்கற்களால் எழும்பிய கட்டடம் அது. ஓரத்தில் அகலமான படிக்கட்டுகள் மேல் செல்ல. கையில் புத்தகப்பையுடன் மேலமே பார்த்தவாறு ஏறுவான். கைப்பிடிச் சுவரையொட்டிய வேப்ப மரத்தின் இலைகள் உதிர்ந்து பறந்து மிதந்து வருவதை ரசித்தபடியே ஒவ்வொரு படியாக ஏறுவான்.

நேரம் தனது கால்களை எட்டிப் போட்டபடி முன்னேறிக் கொணடிருந்தது. வந்த வேலையை விட்டுவிட்டு இப்படி பார்த்திருப்பது அதிகமாகப்பட்டது. 15 ஆண்டுகளில் தன் வாழ்க்கையை அலைக்கழித்த இந்த பள்ளிக்கூடத்தை பார்க்க கோபமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது.

கடைக்காரன் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சிகரெட் இருக்கா என்று கேட்டு வாங்கினான். பார்தது போல் இருக்கிறதே என கேட்டு விடலாமா என நினைத்தான். சொன்னாலும் தன்னை அடையாளம் தெரியப்போவதில்லை. இங்கு கொஞ்ச நாட்களே படித்தான். அந்த சொற்ப நாளின் ஒரு மதிய வேளைதான் அவனை ஓட ஓட விரட்டியது.

விளையாடப் போக மனமின்றி ஜன்னல் வழி வேடிக்கை பார்த்திருந்தான். தடதடவென ஐந்தாறு மாணவிகள் அவனை நோக்கி வந்தனர். அவர்களில் தலைவி போல் இருந்தவள் அவனிடம் வந்தாள். சிவா…ஈஸ்வரியப் பாத்து நீ என்ன சொன்னே? என்றாள். யாரு? ஈஸ்வரியா? நான் ஒன்றும் சொல்லலையே…அவன் ஒன்றும் புரியாமல் பேசினான்.

நீதான் சொன்னயாமே…ஈஸ்வரி அசிங்கமா இருக்கிறான்னு…அவ அழுதுட்டு இருக்கறா…ஸ்கூலுக்கு படிக்கத்தானே வர்றே…பொண்ணுங்களுக்கு மார்க் போடாதே…முதல்ல உன் மூஞ்சிய கண்ணாடியில பாரு… சொல்லிவிட்டு வேகமாக சென்றனர்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் உட்கார்ந்திருந்தான். ஏற்கெனவே இருந்த மனத் தாங்கள் அவனை அழச் செய்தது. அழுதான். அடுத்த பீரியடுக்கு மாணவர்கள் எல்லோரும் வந்தனர். தனசேகர் தான் முதலில் கவனித்தான். கேட்டான். டேய் இத விடக்கூடாது…உன்ன பாத்து இப்படி சொல்லிடாளுகல…அவன் தடுத்தும் விஷயம் ஹெட் மாஸ்டர் வரை சென்று விட்டது. சிவா, தனசேகர், ஈஸ்வரி இன்ன பிற தோழிகள் சகிதம் ஹெட் மாஸ்டர் அறைக்கு அழைக்கப்பட்டனர்.
ஏம்மா…அவன் சொன்னானா?
அப்படிதான் என் பிரெண்ட்ஸ் சொன்னாங்க சார் என்றாள் அழுதுகொண்டே.
சார் நான் ஒன்னும் சொல்லல சார்…யாரோ வேண்டாதவங்க சொல்லி இருப்பாங்க சார்…இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடமாட்டாரா என்று கெஞ்சினான்.
அவள் அழுகை பெரிதாகியது. வேறு வழி இல்லாமல் இவனும் அழுதான்.
இங்க பாருப்பா டிசிப்ளின் முக்கியம்…உன்ன பாதி வருஷத்துல ஸ்கூல அட்மிஷன் கொடுத்ததே பெரிய விஷயம்…நீ உங்க அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வா. என்று சொல்லிவிட்டு எல்லோரையும் அனுப்பினார். தனசேகர் சிரித்துக் கொண்டு வருவது காதில் விழுந்தது.

எதுவும் சொல்லாமல் அவன் அப்பாவை அடுத்த நாள் அழைத்து வந்தான். அவர் குடித்திருந்தார்.

உங்க பையன் டிசிப்ளின் இல்லாம இருக்கான்.
என்ன செஞ்சான் சார்..?
பொண்ணுங்கள பாத்து கிண்டல் பண்ணி இருக்கான்.
சார் நான் சொல்லல சார்..
ஒரு வார்னிங் கொடுக்க தான் உங்கள வரச் சொன்னேன்.. இனிமே ஒழுங்கா இருக்க சொல்லுங்க…
மணி அடித்தது….மதிய உணவு வேளை…
வெளியே வந்த போது அவன் அப்பா மிருகமாகி இருந்தார்.
ஏன்டா நாயே…ஒழுங்கா சோத்த தின்னுட்டு படிக்கிறத விட்டுட்டு பொம்பளைக பின்னாடியா சுத்துற…எட்டி உதைத்தார். குப்புற விழுந்தான். மிதித்தார். பள்ளிக்கூடமே அவனை வேடிக்கை பார்த்தது. நடுத் தெருவில் உடை கிழிந்தவன் போல் மனம் அழுதது. யாரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தான்.
அழுது கொண்டே ஸ்கூலை விட்டு ஓடி வந்தான்…இதே கேட் அருகே வந்த போது திரும்பி பார்த்தான். தூரத்தில் தனசேகர் சிரித்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரியுடன்.\

அதற்கு பிறகு படிப்பை விட்டு சென்னை சென்று அடிபட்டு மிதிபட்டு, தொழில் கற்று, சொத்து சேர்த்து…இன்று இந்த உயரத்தில் நின்று கீழே பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது தான் ஏறி வந்த உயரமும் அதில் தெரிந்த உதிரம் படிந்த தன் கால் தடங்களும்…
இரவு தனது சிறகை விரித்து பறக்கத் துவங்கி இருந்தது.
என்ன சார்…இந்த ஸ்கூல படிச்சிங்களா…அப்படியே பாத்துட்டே இருங்கீங்க…
ஆமா.. ஆனா கொஞ்ச நாள் தான்…
நான்கூட இங்கதான் படிச்சேன் சார்…விதி என்ன இப்படி டீ போட வச்சிருச்சு…
சிரித்துக் கொண்டே சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல் சாலையை கடந்தான்.
காரில் அமர்ந்து புறப்பட்ட போது அந்த கடையின் மேலே மெல்லிய மஞ்சள் விளக்கு ஒளியில் தகரத்தில் செய்த அந்த போர்ட் கண்ணில் பட்டது.
கோணல் மாணலாக கையால் எழுதி இருந்தது… கூர்ந்து படித்தான்.

தனசேகர் டீ ஸ்டால்.

தூரத்தில் ஒரு நட்சத்திரம் அவனை பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டிருந்தது.

நன்றி: தினமணி,  திண்ணை.காம்

மார்ச் 11, 2010 at 5:48 பிற்பகல் மறுமொழியவும்

சுழற்பந்து

“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அதுஎண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒருசின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடிநடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்ததுபோதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதிகூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச் செய்வோம். என்னசொல்றீங்க?” என்று கேட்டு விட்டு பந்தை சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட்பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான் மதியழகன்.

அவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில் இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள்ளை அடிப்பதற்கோ அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வர்.

ஆனால் கணேசா கபே என்று சொல்லக்கூடிய ஒரு பாய்லர், சில கண்ணாடி டம்ளர்கள், ஓலைக் குடிசை, கால் உடைந்ததால் இருபுறமும் செங்கல் அடுக்கி அதன் மீது பாங்காக வைக்கப்பட்ட பழைய மரப் பலகை, மேலே கிடக்கும் கசங்கி படிக்க லாயக்கற்ற அன்றைய செய்தித் தாள் மற்றும் சில வறண்ட வடைகளைக் கொண்ட டீக் கடையில் இப்படி வேலை வெட்டி இல்லாத அல்லது வெட்டி வேலை செய்யும் ஒரு 15 பேர் தினமும் அரட்டை அடிப்பதை கவனிப்பதற்கு அந்த ஊர் மக்களுக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை.

“எவனாவது உருப்படற மாதிரி இருக்கறானா பாருங்க… அத்தன பேரும் வேலைக்குப் போகாம எப்பப் பார்த்தாலும் டீக் கடையில உக்காந்துட்டு அரட்டை… ஏதோ உலகத்தையே புரட்டுற மாதிரி மீட்டிங்கு…எல்லாம் இவனுங்க அப்பன், ஆத்தாளச் சொல்லோணும்’ உரக் கடை ராசுவிடம் புலம்பிச் சென்றார் பால்காரர் மணி.

“ஏண்டா மதி, நீ சொல்ற மாதிரி செஞ்சா நமக்கு வேண்டியது கிடைக்குமாடா?’- இது எங்கே நடக்கப் போகிறது என்ற தொனியில் கேட்டான் சுரேஷ்.

“ஆமா… போன முறை முத்துச்சாமிக்கு செஞ்சோம்… அவரும் புது பேட், கிட்ஸ் எல்லாம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு… ஆனா ஜெயிச்ச பின்னாடி என்னாச்சு… மனுஷன் ஒரு டீயாவது வாங்கித் தந்தானா?’ கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தான் ராஜூ.

“இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆளுக்கு 100 ரூபா போட்டா நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக்கலாம். எதுக்கு இவனுகள பிடிச்சுத் தொங்கோணும்’ என்றான் சிவா.

இல்லாட்டி அவருகிட்ட முன்னாடியே பணத்தை வாங்கிட்டா என்ன?…ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்லிக் கொண்டிருந்தனர்.

கவனமாகக் கேட்ட மதி பேசத் துவங்கினான். “அதெல்லாம் வேண்டாம். சுந்தரமூர்த்தி தான் இந்த முறை பஞ்சாயத்துப் பிரசிடன்ட்டுக்கு போட்டியிடுறார். எலக்ஷனுக்கு இன்னும் 15 நாள் இருக்கு. அவருகிட்ட ஆதரவு கொடுக்கறோம்னு சொல்லி பிரசாரம் செய்வோம். அதுக்குப் பிரதிபலனா நம்ம டீமுக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கறது அப்படின்னு ஒரு டீல் போட்டுக்குவோம். முன்னாடியே பணம் வாங்கிட்டம்னா அப்புறம் வேணுங்கிற போது நாம் போய் நிற்க முடியாது’.

“எந்தக் காலத்துலடா இருக்கிற நீ. எந்த அரசியல்வாதியாவது சொன்னதச் செஞ்சுருக்கானா? இவரு மட்டும் என்ன யோக்கியமா. தேர்தலுக்கு முன்னாடியே கழுத்துல துண்டப் போட்டு வேணுங்கிறத கறக்கணும்..அதுதான் நமக்கு சேஃப்’- இது சுரேஷ்.

எல்லோருக்கும் ஆறிப்போன டீ வந்தது. கடை பூட்டும் நேரமாகி விட்டது என்பதற்கு அதுவே சாட்சி. டேய் கணேசா மணி 9 ஆயிடுச்சா என்றபடியே டீயை உறிஞ்சினார்கள். கடைய பூட்டறேன்…எல்லாரும் கிளம்புங்கடா என்று வாய் தவறி சொல்லி விடக் கூடாது என்பதற்காக டீக் கடை கணேசன் செய்யும் வித்தைகளில் ஒன்று ஆறிப்போன டீ.

மறுநாள் காலை அணியின் மொத்த வீரர்களும் சுந்தரமூர்த்தியை பார்த்து என்ன சொல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர்.

“”டேய் மதி அங்க பாரு…அந்தாளு வர்றாரு…” பிரசிடென்ட் வேட்பாளர் அவர்களை நோக்கி புல்லட்டில் வந்து கொண்டிருந்தார்.

“தம்பிகளா வணக்கம். பதில் வணக்கத்தை தேர்தல் நேரத்தில் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிந்ததால் அவரே தொடர்ந்தார். போன முறை நம்ம எதிர் பார்ட்டி ஜெயிச்சதுக்கு உங்க பிரசாரமும் ஓட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு எந்த பிரதிபலனும் அவர் செய்யலைங்கிறதும் எனக்குத் தெரியும். அதனால இந்த முறை உங்க ஆதரவு அவருக்கு இருக்காது. எனவே எனக்கு பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் அணிக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்கிறேன். என்னப்பா சொல்ற மதியழகா?’

“சோடா குடிக்காதது மட்டும்தான் பாக்கி…மூச்சு விடாம பேசுறாண்டா’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மதி.

“சரிங்ணா..ஆனா ரெண்டு பேரும் நம்ம வார்டா போயிட்டீங்க…அவரும் நம்மகிட்ட வரல. போன முறை ஜெயிக்க வச்சதுக்கு ஒன்னும் பண்ணல. அதனாலகூட இருக்கலாம். நீங்க முதல்ல வந்துட்டீங்க. அணி வீரர்களிடம் பேசி முடிவு சொல்றேனே. அப்படியே டீ, வடை சொல்லீருங்க’ என்று தாடியை தடவிக் கொண்டான்.

கணேசா கபேவுக்கு பின்னால் உள்ள பாறைக் குழிக்கு விரைந்தனர். “டேய் மதி…கொஞ்சமாவது அறிவு இருக்காடா…எவ்ளோ பெரிய மனுஷன் நம்மகிட்ட ஆதரவு கேட்கிறார்..பெரிய இவனாட்டம் பந்தா பண்ற…சரின்னு உடனே சொல்ல வேண்டியது தானே’ செல்வராஜ் கோபப் பார்வை வீசினான்.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு பின்னால் இழுத்துக் கொண்டே பேசினான் மதி. “நீ கொஞ்சம் சும்மா இருடா. நடக்கப் போறது பார்லிமெண்ட் எலக்ஷன் இல்லை. பஞ்சாயத்து எலக்ஷன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். முத்துச்சாமி, சுந்தரமூர்த்தி ரெண்டு பேரும் ஒரே வார்டு. ஒருத்தன் நம்மள முன்னாடி ஏமாத்துனவன். இவனும் நம்மள ஏமாத்திறக் கூடாது. மொத்தம் 4 வார்டு இருக்கு. அதுல 2000 ஓட்டு இருக்கு. எப்படியும் 1200 தான் விழும். ரெண்டு பேருக்குமே செல்வாக்கு இருக்கு. வெட்டியாத்தானே இருக்கிறானுக கூப்பிட்டா வந்துருவோம்னு நினைப்புல வந்திருக்கார். பிரசாரம் பண்ண பெருசா எவனும் வர மாட்டான். நம்ம பண்ற கேன்வாஸ்ல ஓட்டு எங்க வேணா விழும். அதனாலதான் நம்மளத் தேடி வந்திருக்கார். நாம கொஞ்சம் பந்தா பண்ணாதான் மதிப்பானுக. சரி நம்ம தேவையை அவரே சொல்லிட்டார். சரின்னு போய் சொல்லீற வேண்டியதுதான்’ டீ, வடையை காலி செய்து விட்டு எல்லோரும் எழுந்தனர்.

எலக்ஷன் ரிசல்டை விட இவனுக என்ன ரிசல்ட் சொல்லப் போறானுகளோ என்ற எதிர்பார்ப்பில் பார்த்தார் சுந்தரமூர்த்தி. இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சில விநாடிகள் மெüனமாகப் பார்த்த மதி, “உங்களுக்குத் தான் பிரசாரம்னு முடிவு பண்ணியிருக்கோம்’ என்றான். ரொம்ப சந்தோஷம் தம்பி..அப்ப இப்பவே ஆரம்பிச்சிடுவோம் என்றபடி புல்லட் நோக்கிச் சென்றார்.

“அண்ணா…எங்களுக்கு திருப்பூர்ல ஒரு மேட்ச் இருக்கு. அதுக்குப் போகணும். நாளைக்கு ஆரம்பிச்சிடலாமா? சுந்தரமூர்த்திக்கு தன் விதியை நினைத்து கடுப்பாக இருந்தது. முகத்தில் எதுவும் காட்டாமல் ஆகட்டும் தம்பி என்றார். அவர் போகும் முன் அணிச் செலவுக்கு 500 ரூபாய் வாங்க மதி மறக்கவில்லை.

மறுநாள் உங்கள் ஓட்டு சுந்தரமூர்த்தி அண்ணனுக்கே. உங்கள் சின்னம் பேனாக் கத்தி என்று மதியழகன் தலைமையில் பிரசாரம் விண்ணைப் பிளந்தது. சுந்தரமூர்த்தி தனது சகாக்கள், அணி வீரர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அதுதான் பஞ்சாயத்து தேர்தலின் மகிமை. அதுதான் பிரச்னையும் கூட. யாருக்கு ஓட்டுப் போடுவது என்று வாக்காளர்கள் குழம்பித் தவித்தனர்.

இரவு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது மணி 10. “இப்படி வேலைக்குப் போகாம ஏண்டா ஊரச் சுத்திட்டு இருக்கற’ தட்டில் சாப்பாடு போட்டபடி பேசினார் அம்மா. “நான் சும்மா சுத்தல. தேர்தல் பிரசாரத்துல இருக்கிறேன்.’

“ஆமா இவரு பெரிய எம்.பி. ஆகப் போறாரு’ என்றார் கட்டிலில் படுத்திருந்த அப்பா.

“யாருக்கு பிரசாரம் பண்ணறீங்க?’

“நம்ம சுந்தரமூர்த்தி அண்ணனுக்குத் தான்.’

“ஏண்டா கொஞ்சமாவது ரோஷம் இருந்தா அந்தாளுக்குப் போய் பிரசாரம் பண்ணுவியா?’ வெந்நீர் காலில் பட்டது போல கொதித்தாள் அம்மா. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

கேபிள் டி.வி. கனக்ஷனுக்கு பணம் வசூலிக்க வந்திருந்தார் சுந்தரமூர்த்தி. “ஏம்மா கற்பகம்…2 மாசமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்றியாமே…ஏன்?’

“உங்க கேபிள் டி.வி.யால ஒரு பிரயோசனமும் இல்ல. எப்ப பாத்தாலும் கோடு கோடா தெரியுது. இல்லாட்டி கட் ஆகுது. மாசத்துல 15 நாள் இப்படித்தான் தெரியுது. எதுக்குப் பணம் தரோணும்?’

“உங்க வீட்ல மட்டும் தான் இப்படி சொல்ற. மத்தவங்க வீட்டுல எல்லாம் நல்லா தெரியுது. பணம் கொடுக்க வக்கில்லைனா கனக்ஷன கட் பண்ணிக்கோ…வார்த்தைகள் எரிந்து விழுந்து தெருவில் உருண்டோடின.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சீரியல் பார்ப்பதை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவும் சளைக்காமல் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேச்சு முற்றி கையை ஓங்கியபடி அருகே வந்து போடி என்று கத்தினார் சுந்தரமூர்த்தி. எல்லோரும் ஒரு விநாடி அதிர்ந்து பார்த்தனர்.

அம்மா அழுது கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்தான் மதி. “நான் என்னமா பண்ணட்டும். டீம் பசங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. பிரசாரம் பண்ணாம இருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

தேர்தல் நாள். நமக்குப் பார்த்து ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் முத்துச்சாமியும் சுந்தர மூர்த்தியும். வெளியே வந்தவர்களிடம் யாருக்குப் போட்டீங்க என்று கேட்டு அங்கேய தமது வெற்றியை உறுதி செய்து கொண்டிருந்தனர்.

வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சூழ வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் பதிவான 1267 வாக்குகளில் தங்களுக்கு எவ்வளவு வரும் என்று சுந்தரமூர்த்தியும், முத்துச்சாமியும் தத்தமது பரிவாரங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மதியும் தோழர்களும் கைகளில் பட்டாசுடன் அமைதியாக இருந்தனர்.

முதல் சுற்று எண்ணிக்கை முடிவு வந்தது. 2 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் சுந்தரமூர்த்தி. 2வது சுற்றிலும் இதே நிலைமை. மூன்றாவது சுற்றில் சுந்தரமூர்த்தி உற்சாகத்துக்கு வேட்டு வந்தது. முத்துச்சாமி-499. சுந்தரமூர்த்தி-500.

4வது வார்டு ஓட்டு எண்ணப்பட்டது. முடிவு தெரிய நகம் கடித்தபடி சுந்தரமூர்த்தியும், எப்படியும் ஜெயிச்சுருவோம் என்று முத்துச்சாமியும் நின்று கொண்டிருந்தனர்.

நம்ம பசங்க 15 பேர் வீட்லயும் நமக்குத்தான். நூர்ஜஹான் வீடு, ராமசாமி, நசீர் பாய், கறிக்கடை சண்முகம், மெட்ராஸ்காரர் வீடு, நடுத்தோட்டம் பழனிசாமி வீடு, நம்ம பங்காளிக வீடு என்று தனக்குத் தெரிந்த எல்லோர் வீட்டு ஓட்டுக் கணக்கையும் மனதுக்குள் போட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி. எங்கேயாவது மிஸ் ஆயிடுச்சா? என்று யோசித்துப் பார்த்தார். எப்படியும் 2, 3 வித்தியாசத்துல ஜெயிச்சிருவோம். ஏம்பா நமக்கு பிரசாரம் பண்ணீங்களே ஓட்டுப் போட்டீங்களா என்று எல்லோரையும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். என்ன இப்படி கேட்கறீங்க. உங்களுக்குத்தாங்ணா போட்டோம் என்றான் மதி.

முத்துச்சாமி அன் கோ பட்டாசு வெடித்து கொண்டாடியது. நிரந்தர பஞ்சாயத்துத் தலைவர் வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முத்துச்சாமி-635, சுந்தரமூர்த்தி-632. மூன்று ஓட்டுகளில் தோல்வியுற்ற சுந்தரமூர்த்தி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “இந்த முறையும் நமக்குத் தோல்விதானா, பேட், கிட்ஸ் எல்லாம் அவ்ளோதானா’ என்று கேட்டுக் கொண்டனர்.

“வெற்றிக்கும் தோல்விக்கும் ஒன்று தான் வித்தியாசம். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சம்பவமாக இருக்கலாம்’ மெல்லிய சிரிப்புடன் சொல்லிக் கொண்டான் மதியழகன்.

அதைக் கவனிக்காமல் எல்லோரும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

நன்றி: தினமணி, ஜூன் 2009

மார்ச் 11, 2010 at 5:42 பிற்பகல் மறுமொழியவும்

ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன

ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம்நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டுகிடந்தன. சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன. குடிசையின் உள்ளே கூரையில் பனியின் சுவடு தெரிந்தது. அம்பறாத்தூணியில்இருந்து கொத்துக் கொத்தாக அம்புகள் பாய்வது போல குளிர் உடலெங்கும் குத்திவாட்டியது. அருகில் இருந்த குடிசையில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை. சீடர்கள் இந்நேரம் தங்களுடைய அரண்மனைகளில் இருந்து புறப்பட்டிருந்தால்வந்து சேர எப்படியும் சில நாட்கள் ஆகும். தனது புலமையையும், அறிவுக்கூர்மையையும் போற்றும் இந்த மன்னர்களை நினைத்து அவரது மனம் கொஞ்சம்பெருமை அடைந்தது. முதுமை அடைந்து வருவதை கண்களில் இருந்து நழுவிச்சென்ற தூக்கம் உணர்த்தியது. எழுந்து உட்கார்ந்தார் ஆதிகவி. தரை சில்லிட்டுஇருந்தது.

குடிசையை விட்டு வெளியே வந்தார். இடது பக்கம் இருந்த மரத்தடியில் கட்டப்பட்ட பசு அவரை பார்த்ததும் எழுந்து நின்றது.அருகே சென்று அதை அன்பாக தடவி விட்டார். சிறிது புல்லை எடுத்துப் போட்டார்.

இருபுறமும் செடிகள் அடர்ந்த ஒற்றையடி காட்டுப் பாதையில் தடாகம் நோக்கி மெல்ல நடந்தார். கண் காணாத தொலைவு நோக்கி ஓடிக் கொண்டிருந்தன அடிவானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள்.

தடாகத்தின் மேல் பனிப் புகை மண்டலம் எழுந்து உயர்ந்து கொண்டிருந்தது. காற்றின் சிலுசிலுப்பு மனதை ஏதோ செய்தது. கவிதை புனைய ஏற்ற நேரமிது. இருப்பினும் மனதில் தோன்றிய எண்ணத்தை அடித்து விரட்டினார். போதும் கவிதை எழுதியது என்று தனக்குள் கூறிக் கொண்டார்.

குரங்கொன்று தாவிக் குதித்ததைக் கண்டு அஞ்சிய பறவைகள் வேறு கிளைகளில் பறந்து அமர்ந்தன. தடாகத்தின் கரையில் விழுந்து கிடந்த பெரிய மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்தார் ஆதிகவி. பல் துலக்கும் போது எதிரே இருந்த பாறை மேலிருந்து ஒரு தவளை அவரையே உற்றுப் பார்த்தது. தள்ளி அமர்ந்தார். மறுகரையில் இருந்த மரங்களின் ஊடே பாய்ந்து மறைந்தது புள்ளிமான் ஒன்று. “தொளக்’ சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். தடாகத்தின் கரையில் ஒரு வரையாடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததை தவிர யாரும் தென்படவில்லை. கதிரொளி இக் கானகத்தில் இறங்கி நடக்க இன்னும் வெகு நேரம் ஆகும். இந்நேரத்தில் மரக்கூட்டம் நடுவில் பிளிரும் களிறுகள் நின்றாலும் தெரியப் போவதில்லை என்று எண்ணியபடியே மெல்ல நீரில் இறங்கி குளிக்கத் தொடங்கினார்.

நீராடல் முடித்து திரும்பி கரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கே நின்ற உருவத்தைப் பார்த்த போது மனம் ஒரு நொடி அதிர்ந்தது. கண்கள் மின்ன நீண்ட தலைமுடியுடன் ஒரு முதியவர் அவரையே பார்த்து புன்னகைத்தார்.

“”யார் நீங்கள்…இந்தக் கானகத்தில் இங்கே என்னை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்?”

“”தவம் செய்ய இந்தக் கானகத்தில் அலைகிறேன் ஆதிகவி.”

காட்டுப்புற்களின் மீது பட்டுத் தெறிக்கும் மழைபோல் அவரது குரல் சில்லிட்டுக் கேட்டது. ஏதோ ஒரு தெளிவு அவரது முகத்தில் தெரிந்தது.

“”என் பெயர் உங்களுக்கு எப்படி..”

“”இந்த மலைக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசன் உன்னிடம் படித்தவன். அவன் உன் அருமை பெருமைகளை அரண்மனையில் கூறியதை கேட்டு உனைக் காண வந்தேன்.” என்று வினா விழும் முன்பே விடையிறுத்தார்.

“”என்னைத் தேடி எதற்காக வந்தீர்கள்..?”

வா உன் குடிசையில் அமர்ந்து பேசுவோம். முன்னே நடந்தார் முதியவர். தலை முடியின் ஈரத்தை துவட்டிய படியே பின் சென்றார் ஆதிகவி. குடிசையின் முன் மரத்தடியே இருந்த பெரிய கல்லின் மீதமர்ந்தார் அவர். எதிரே கிடந்த மரத்துண்டு மீது ஆதிகவி அமர்ந்தார்.

எதையோ சிந்தனை செய்தபடி இருந்துவிட்டு அமைதி கலைத்துக் கேட்டார். “”நீ இப்போது எல்லாம் என்ன செய்கிறாய் ஆதிகவி?”

இப்போது `எல்லாம்’ என்று அவர் கேட்டதில் இருந்தே தனது கடந்த காலத்தை அறிந்தவர் என உணர்ந்தார்.

“அரசகுல மக்களுக்கு போர் பயிற்சியும் வாழ்வியல் கல்வியும் கற்றுக் கொடுக்கிறேன்”

சில ஆண்டுகளுக்கு முன் நீ படைத்தாயே இம்மொழியின் இலக்கணம் அதைப் பற்றி.? ஆம்..அதையும் தான்.

“இம்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்..நின் புகழ் வானுயர்ந்து நிற்க நான் ஒன்று சொல்கிறேன். மொழி நம் இருவருக்கும் இடையே உணர்வுகளை அறியச் செய்ய வந்த கருவி.”

“நீங்கள் வந்த நோக்கம் என்ன துறவியே…”தீர்க்கமாகக் கேட்டார் ஆதிகவி.

“சொல்கிறேன் கேள். நீ படைத்த இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என வகுத்துப் படைத்திருக்கிறாய். நன்று. ஆனால் பொருளுக்கு அப்பால் என்ன அல்லது எழுத்துக்கு முன் இருப்பது என்ன?”

“இந்த அதிகாலை நேரத்தில் என்னைக் குழப்பவே வந்தீர்களா?” பேச்சில் வெப்பம் தெறித்தது.

“நான் பேசுவதை நீ புரிந்து கொள்கிறாய் என்றால் என் வாயில் இருந்து வரும் சொற்கள் ஒரு பொருளை உணர்த்துகின்றன. அதற்குக் காரணம் சொற்கள். எழுத்தால் ஆனவை சொற்கள். எழுத்துக்கு முன் ஒலி. அதாவது அ என்பது ஒரு ஒலி வடிவம். ஏ என்பது வேறோர் ஒலி வடிவம். ஆக பொருளுக்கு முன் சொல். சொல்லுக்கு முன் எழுத்து. எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன் என்ன?”

நீண்ட நாள் தான் மறந்திருந்த கனவை மீண்டும் தட்டி எழுப்பிய அவரை ஆழமாக பார்த்தார் ஆதிகவி. புன்னகையின் கீற்று அவர் இதழோரம் எட்டிப் பார்த்துச் சென்றது.

“பேசுபவன் மொழிக்கு இலக்கணம் படைக்கலாம். பேச முடியாதவன் எப்படி புரிகிறான். வெறும் கையசைவில் மட்டும் தானா? அதற்கும் மேல் ஏதோவொன்று இரு பேச முடியா மனிதரிடத்தில் உள்ளது. அது என்ன? அவன் மொழிக்கு உன்னால் இலக்கணம் படைக்க முடியுமா? அப்படி செய்தால் அது உன் புகழை நிலைநிறுத்தும்.”

“சில காரணங்களால் நான் கவிதை எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகின்றன துறவியே. இனித் தொடரும் எண்ணமும் இல்லை. என்னை விட்டுவிடுங்கள்.”

“அப்படியானால் கொலைத் தொழில் புரியும் அரச குல மக்களுக்கு அறிவை புகட்டிக் கொண்டிரு. உன் எழுத்தாணியை தீயிலிட்டு கருக்கிவிடு” என்று கூறிவிட்டு விறுவிறுவென மரங்களின் ஊடே நடந்து மறைந்தார் துறவி. துறவிக்கே உரிய சினம். அவர் சென்ற திசையில் பறவைகள் கத்தியபடி பறந்தன.

“யார் இவர். எதற்காக என்னை வந்து இப்படி எழுதக் கேட்கிறார். இதற்கு முன் பார்த்தது இல்லையே. பெயரைக்கூட கேட்க மறந்துவிட்டோமே…எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன்…ஒலி தோன்றுமிடம்…”உந்தி முதலா முந்து வளி தோன்றி கழுத்தினும் மிடற்றினும்…” தனது கவிதை வரிகள் நினைவில் அசைந்தாடின. என் கனவு இவருக்கு எப்படித் தெரிந்தது. அதை மறந்தும் நினைவூட்ட வந்த இவர் யாராக இருக்கும்…அய்யோ துறவியே நில்லுங்கள்…ஆதிகவி கானகம் நோக்கி ஓடினார். முதுமையை மறந்து வேகமாக ஓடினார். காய்ந்து கிடந்த இல்லை சருகுகளின் மீது கால்கள் பட்டு தடதட ஓசை எழும்பி கானகத்தில் எதிரொலித்தது. மலையின் சரிவை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார் ஆதிகவி.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனத்துக்கு அருகே அமைந்த அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் விடுதியின் 13-ம் எண் அறையில் படுத்திருந்த மொழியியல் ஆய்வு மாணவன் கவிச்செல்வன் திடுக்கென எழுந்து உட்கார்ந்தான். ஒரே புழுக்கமாக இருந்தது. மின்விசிறியை சுழல விட்டான். வெகு நேரம் கால்கள் எங்கோ ஓடிக் கொண்டிருந்தது போல் உணர்ந்தான். கால்களைத் தடவிக் கொண்டான். தண்ணீர் குடித்துவிட்டு சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். இதோடு பல நாட்கள் இப்படி நிகழ்ந்துவிட்டது. மெல்ல மெல்ல மின்விசிறியின் ஒலி உயர்ந்தது. அலை அலையாக எழுந்து அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.

தட்தட்…ஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்..காதுகளில் விழும் ஒலிக்கேற்ப வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான் வெகுநேரம். காற்று, விசிறி, ஒலி…அதுக்கு முன்னாடி என்ன? மயில் ஒன்று க்வாக் என அகவியது. க்வாக்..க்வாக்…க்…வா…க் என்று அவனும் சத்தமிட ஆரம்பித்தான். விடிந்தது கூடத் தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு நான் அவன் அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சிரசாசனம் செய்வதுபோல் தலைகீழாக நின்று கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். பயந்துபோய் ஓடினேன்.

“டேய் ரமேஷ்…எழுந்திருடா…கவிக்கு என்னமோ ஆயிருச்சு…தடதடஸ்ஸ்புஸ்னு என்னமோ கத்திட்டு இருக்கிறான்டா”

“இவனுக்கு இதே பொழப்பா போச்சுடா…வா பார்க்கலாம் என்று ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துவிட்டு என்னிடம் ஒன்று நீட்டியபடியே வெளியே வந்தான். கவிச்செல்வன் அறைக்குச் சென்றோம்.

“டேய் கவி…என்னடா ஆச்சு..எதாவது கனவு கண்டயா மாப்ள.”

“ஒன்னும் இல்லயே…நான் நல்லாத்தான் இருக்கேன். எதுக்கு எல்லோரும் ஒன்னா வந்திருக்கிறீங்க…” அவன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதை கண்கள் இரண்டால் அறிந்தேன்.

“இல்ல.. டீ சாப்பிட…தம் அடிச்சுட்டு வரலாம்னு..”என்று ஏதோ சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தோம்.

குளித்துவிட்டு கிளம்பி டிபார்ட்மென்ட் போகும் போது அவன் அறையைத் தட்டினேன். திறக்கவில்லை. மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தேன். க்வாக் என்று கத்தியபடி எதேயோ எழுதுவதும் பின்னர் அமைதியாக இருப்பதும் மீண்டும் எழுதுவதுமாக இருந்தான். அருகில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நோம் சோம்ஸ்கியின் லாங்குவேஜ் அண்ட் மைண்ட் புத்தகம் கிடந்தது.

அதற்குள் மற்ற துறை நண்பர்கள் வந்தனர். கூட்டம் கூடியது. “இந்த ரூமுக்கு பின்னாடி எவனோ தூக்கு மாட்டி செத்துட்டான் மாப்ள. அந்த ஆவி அடிச்சிருக்குமோ…”சிரித்தான் எகனாமிக்ஸ் பிரதீப்.

“ஆவியும் இல்ல இட்லியும் இல்ல…இது ஏதோ ஸ்பிலிட் பெர்சனாலிட்டி மாதிரி” என்றான் உளவியல் ஆய்வு மாணவன் சித்தார்த்.

” இங்க பார்றா அந்நியன்…”சிரித்துக் கொண்டே சென்றான் கெமிஸ்ட்ரி ஜான்.

“அவன வரச்சொல்லுடா மாப்ள…நம்ம புரபொஸர்கிட்ட காட்டி கவுன்சலிங் கொடுக்கலாம்” என்றான் சித்தார்த்.

“கவி…டிபார்ட்மென்ட் போகலாமா?. நான் ரெடி என்று கசங்கிய சட்டையுடன் முன்னே வந்தான். குளிக்கலையா? பெர்பியும் எடுத்துக் காட்டினான். என்னடா மனசு எதாவது சரியில்லையா…தீபிகா எதாவது சொன்னாளா…லவ் எதாவது…

“கருமம்டா…என்று ஒரே வார்த்தை சொன்னபடி தலையில் அடித்துக்கொண்டான் கவி.

மெஸ்ஸில் சாப்பிடும் போது தட்டை தூக்கி எறிந்தான். அது டிங்டடாங் என்று ஒலி எழுப்பி அடங்கியது. அதை உரக்கச் சொல்லிப் பார்த்தான். உனக்கு என்னடா பைத்தியமா..பளார் என்று அறைவிட்டேன். அந்த சத்தத்தையும் உச்சரித்தான். “இப்போ நீ அடிச்சயே..இந்த சத்தம் அங்க இருந்ததா இல்ல இங்க இருந்ததா? இருந்துச்சு அப்படின்னா ஏன் அதுக்கு முன்ன கேட்கல? என்னையே உற்றுப் பார்த்தான். எனக்கு கைகள் நடுங்கின.

எல்லோரும் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு சைக்காலஜி டிபார்ட்மென்ட்டுக்குச் சென்றோம். அதற்குள் மொழியியல் துறை தலைவர் சண்முகம் அங்கு வந்திருந்தார். கவிச்செல்வனின் ஆய்வு வழிகாட்டி அவர். நான், கவி, ரமேஷ், சித்தார்த் நான்கு பேரும் துறைத்தலைவர் கணேசன் அறைக்குச் சென்றோம்.

அறையில் ஏ.சி.குளிர் இருந்தது. புத்தக அடுக்குகள் நூலகத்தை நினைவு படுத்தின. ஏதோ சிந்தனையில் கைகளைக் கட்டியபடி ஃப்ராய்டு உட்கார்ந்திருந்தார். அந்தப் படத்துக்கு கீழே கணேசன் அமர்ந்தார்.

“என்னய்யா பிரச்னை…காலங்காத்தால”

“சார் கொஞ்ச நாளா இவன் நடு ராத்திரியில திடீர்னு தடதட இஸ் புஸ்னு ஏதேதோ சத்தம் போடறான். காலைல வரை இப்படித்தான் இருக்கிறான். வெறிச்சு பாத்துட்டு இருக்கிறான். என்னனு கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்றான். எல்லோரும் ஒரு மாதிரியா பேசுறத கேட்டா பாவமா இருக்கு சார்…” கவியை பார்த்தபடி சொன்னேன். அவன் வெகு தொலைவில் ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

“கவிச்செல்வன் கனவு ஏதாவது கண்டு பயந்திட்டயா?”

“இல்ல சார்”.

“அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க…?”

“நான் ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறேன் சார்”.

“வெரிகுட். டாக்ட்ரேட் வாங்கிறதுக்கு முன்னே புக் பப்ளிஷிங் பண்றது நல்ல விஷயம்தான். ஆல் த பெஸ்ட். என்ன புத்தகம் அது?”

“ஒலிக்கு முந்தைய வடிவம் பற்றியது”.

“பிஸிக்ஸ்ல வருமே அந்த ஒலியா?” இல்லை. மொழியியலில் வருமே அந்த ஒலி..அதாவது phonetics. கணேசன் சற்று கவனமாக அவனைப் பார்த்தார்.

“அதென்ன வடிவம் ஒலிக்கு முன்னாடி?”

“அதாவது சார்…கைகள் இரண்டையும் மேசை மீது வைத்து சுவாரஸ்யத்துடன் முன்னகர்ந்தான். “ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அந்த சொல் எழுத்தால் ஆனது..அந்த எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒலி வடிவம் உண்டு. அந்த ஒலி துவங்குவதற்கு முன்னாடி இருந்தது என்ன?” அவரையே உற்று நோக்கினான். கணேசன் புரியாமல் பார்த்தார்.

” என்ன சார்?”

“நீயே சொல்லுப்பா…”

“அந்த ஒலிக்கு முன்னாடி இருக்கிற ஏதோ ஒன்னுதான் நம்மோட புரிதலுக்கு அடிப்படை…நீங்க சில விஷயம் பாத்திருப்பீங்க. பஸ்ல, பார்க்ல, இங்க யூனிவேர்சிடில ஏன் எங்கவேணா….ஒரு பயனும் பெண்ணும் எவ்ளோ கூட்டம் இருந்தாலும் பேசாம ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருப்பாங்க. ஆனா அவங்க கண்கள் நான்கும் பேசிட்டு இருக்கும். ஆனா புரிஞ்சுப்பாங்க…எப்படி இது சாத்தியம். சொல் இல்லை, எழுத்தில்லை, ஒலி இல்லை ஆனாலும் எதோ ஒன்னு ரெண்டு பேரு மனசுக்கு உள்ளேயும் ஓடுது. எப்படி புரிஞ்சுகிறாங்க? இதே போல பேச்சுத்திறன் இல்லாதவங்களும் எப்படி புரியறாங்க?” என்று சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.

எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.

மீண்டும் முன் நகர்ந்தான். ”இப்ப பச்சை மாங்காய் அப்படின்னு சொன்னா உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?” என்னையும் பார்த்து கேட்டான்.

எனக்கு ஏனோ பயோடெக் மஞ்சுளா ஞாபகத்துக்கு வந்தாள்.

“வாயில் எச்சில் ஊறுன மாதிரி இருக்கும், பல் கூசும்” என்றார் கணேசன்.

”அதேதான். புளிப்பு மாங்காய் அப்படின்னு சொன்னா பல் கூசுது. அப்ப புளிப்பு எங்க இருக்கு? எழுத்திலயா, சொல்லுலயா, உங்க வாயிலயா? இங்கதான் மாங்காய் இல்லையே” கைகளை ஆட்டினான்.

இப்போது கவுன்சலிங் நடப்பது யாருக்கு என்று எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.

“அதைத்தான் நான் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். இது தொல்காப்பியத்தின் தொடர்ச்சி. இதை எழுத வேண்டும் என்று தொல்காப்பியருக்கு ஒரு சிந்தனை இருந்தது. அதைக் கனவுன்னும் சொல்லலாம்.”

இப்போது அவனது ஆய்வு வழிகாட்டி சண்முகமும் அதிர்ந்து பார்த்தார்.

”கவிச்செல்வன்..நீங்க ஏதோ கனவு கண்டு குழம்பத்துல இருக்கீங்க…ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா இப்படித்தான். நிறைய யோசிக்காதீங்க…டேக் இட் ஈஸி…இந்த மாத்திரையை சாப்பிட்டு நல்லா தூங்குங்க” என்று சில மாத்திரைகளை கொடுத்தார்.

“அமுக்கப்பட்ட வேட்கைகள் கனவுகளில் நிறைவேறத் துடிப்பதால் அவை வரம்பற்று வெளிப்படும் அப்படின்னு ஃப்ராய்டு சொல்லியிருக்கிறார்” என்று சண்முகத்திடம் கூறினார் கணேசன்.

“இல்ல சார்..நீங்க சொல்ற ஃப்ராய்டு, பலரோட கனவுகளை ஆராய்ச்சி பண்ணி 1900ம் வருஷம் interpretation of dreams எழுதினார். அதாவது ஃப்ராய்டு ரிசர்ச் பண்றதுக்கு முன்னயே பலருக்கு கனவுகள் இருந்திருக்கு..அதையெல்லாம் அவர் ஆராய்ச்சி பண்ணி இருக்கிறாரா? அப்படி பண்ணத்தான் முடியுமா? நீங்க அதைப் படிச்சுட்டு எங்கிட்ட பேசாதீங்க…கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”உந்தி முதலா முந்து வளி தோன்றி…அதாவது, வயிற்றிலிருந்து வரும் காற்றின் அழுத்தம் கழுத்து, நெஞ்சு, தலை போன்ற இடத்தில் நிலை பெறும். அண்ணம், நாக்கு, பல் என்று படுவதால் ஒவ்வொரு எழுத்தும் எப்படி தோன்றுதுன்னு தொல்காப்பியர் சொல்கிறார். அதுக்கு முன்னாடி அந்த ஒலிக்கு முன்பு இருந்தது என்ன? என்ன? டேபிளை ஓங்கி அடித்தான்.

பேப்பர் வெயிட்டை எடுத்து ஜன்னலில் வீசினான். சலார் என்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அந்த சப்தத்தையும் உச்சரித்தான். கணேசனின் செல்போனை எடுத்து அவர் மீது வீசினான்.

விபரீதம் ஏற்படும் முன் நாங்கள் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். அவன் அறைக்கு கொண்டு சென்று மாத்திரை சாப்பிட வைத்து தூங்க வைத்தோம்.

“அவங்க வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்க சண்முகம் சார். ஒரு மாதிரி ஆகிட்டு வர்றான். இப்படியே போனா சீரியஸ் ஆயிடும்” என்று அவருடன் பேசிக்கொண்டே கிளம்பிச் சென்றார்.

இரவு மெஸ்ஸுக்கு போகும் முன் அவன் அறையை எட்டிப் பார்த்தேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் மட்டும் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து தூங்கிவிட்டேன்.

அதிகாலை திடீர் விழிப்பு வந்து எழுந்தேன். முதலில் கவியின் அறைக்குச் சென்றேன்.

கதவு திறந்து கிடந்தது. அறையில் அவன் இல்லை. புத்தகங்கள் இறைந்து கிடைந்தன. விடுதி முழுவதும் தேடினேன். கால்கள் வலித்ததுதான் மிச்சம். நண்பர்களை எழுப்பும் முன் மீண்டும் அவன் அறைக்குச் சென்று பார்த்தேன். திறந்த நிலையில் கட்டிலில் ஒரு நோட்டு கிடந்தது. அதில் ஏதோ எழுதி இருந்தான் கவி.

பொருளுக்கு முன் சொல், சொல்லுக்கு முன் எழுத்து, எழுத்துக்கு முன் ஒலி….ஒலிக்கு முன்…மௌனம். அமைதி. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பது மௌனம். வாய் பேசாதவனும் உணர்ந்து கொள்ளும் ஓர் உயர் தத்துவம் மௌனம். மௌனத்தில் எல்லாமும் உண்டு. அதை நான் எழுதுவேன். அதற்கு இலக்கணம் படைப்பேன். அதற்கு கீழே கவிச்செல்வன் என்கிற ஆதிகவி என்கிற தொல்காப்பியன் என்று எழுதியிருந்தான்.

எனக்கு ஏனோ அழ வேண்டும் போல் இருந்தது.

திண்ணை.காம் மே 14, 2009.


மார்ச் 11, 2010 at 5:31 பிற்பகல் மறுமொழியவும்

சிந்திக்க வைத்த ஸ்ரீ பிரியா

sriks

சன், கலைஞர், விஜய் என்று எதைத் திருப்பினாலும் ஒரு ஆபாசக் குப்பை அல்லது அறுவை தொடர்கள் தான். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமல் நல்ல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறார்கள்.

திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஒரு நிகழ்ச்சியை கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள். மானாட மயிலாட போன்ற ஆபாச கூத்துக்களையும், பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடக்கும் கும்மாங்குத்து நடனங்களையும் பார்ப்பதற்கு எப்போதுமே எனக்கு விருப்பம் இல்லை.

தனியாக இருக்கும் போது பார்க்க ஆவல் இருந்தாலும் (ஜாள்ளத் துடைச்சிட்டேன்) வீட்டில் பெற்றோர், சகோதரிகள் இருக்கும் போது பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கும். அதனாலேயே சிரிப்பொலி, ஆதித்யா தவிர எந்தச் சேனலும் நான் பார்ப்பதில்லை. எந்தச் சேனலைத் திருப்பினாலும் சினிமா அல்லது சினிமா பாடல் அல்லது சினிமாவை வைத்து குத்தாட்டம் என்று ஒரு விரசமாக மாறிவிட்டது சாட்டிலைட் சேனல்கள்.

ஆனால் சேற்றில் முளைத்த செந்தாமரை என்பார்களே அது போல ஒரு சில நல்ல நிகழ்ச்சிகளும் சன், கலைஞர் டிவிகளில் வருகின்றன. அதில் பூவா தலையா என்ற ஒரு நிகழ்ச்சி கலைஞர் டிவியில் திங்கள் இரவு 10 மணிக்கு வருகிறது. முழுவதும் பெண்களே விவாதிக்கும் ஒரு அரங்கம். ஒரு தலைப்பு, இரு பிரிவுகள். நடுவர்களாக நம்ம குஷ்பு, ஸ்ரீ பிரியா.

எல்லோருக்கும் இருக்கும் ஆதங்கம் போல, கலைஞர் டி.வி உள்பட எல்லா சானல்களும் தமிழைக் கொலை செய்கின்றன என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்குத் தமிழ் பேசுகிறார்கள். ஓரளவுக்குத்தான். ஆனால் குஷ்புவை பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக
நடிகைகளில் எனக்கு சமீப காலமாகப் பிடித்தவர் குஷ்பு. அழகுக்காக மட்டுமல்ல. அவர் பேசும் தமிழ். உச்சரிப்பு கூட ஓரளவு மிகச் சரியாகப் பேசுகிறார். ஆனால் பெரியார் கொள்கைகள் என்பதை கொள்ளைகள் என்று சொன்னதை ஏற்க முடியாது. பாவம் விட்டு விடுவோம். நமீதாவை விட நன்றாகவே பேசுகிறார். படிக்கிறார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் படித்தாரே. (ஒரு வேளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படித்தாரோ?)

பூவா தலையா நிகழ்ச்சியில் கடந்த வாரம் தமிழை வளர்த்தது பழைய திரைப்படங்களா புதிய திரைப்படங்களா என்ற விவாதம் நடந்தது.
பங்கேற்றவர்கள் பெரும்பாலும் நல்ல தமிழிலேயே பேசினர். விதிவிலக்காக சிலர் ஆங்கிலம் கலந்து பேசினாலும் தங்கள் தவறை உணர்ந்து தமிழிலேயே பேசினார்கள்.

ஸ்ரீ பிரியா மிகத் தெளிவாக தமிழில் அழகாகப் பேசினார். அதிலும் ரேடியோ என்பதற்கு வானொலி என்று கூட அழகுத் தமிழில் பேசினார். நிறைய தமிழச் சொற்களைப் பேசினார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால்
வட இந்தியப் பெண்ணான குஷ்பு தனது குழந்தைகளுக்கு தமிழ் பாடத்தை அவரே வீட்டில் சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னார். அது தான் ஆச்சரியம். உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். இந்த ழ, ல, ள உச்சரிப்புதான் சமயத்தில் எனக்கு வரமாட்டேன் என்கிறது என்று சொன்னார்.

முடிவு என்னவோ பழைய திரைப்படங்களே தமிழை வளர்த்தன என்பதுதான். அதுவல்ல முக்கியம். அங்கு பேசிய இரு நடிகைகளின் தமிழ் பற்றிய அக்கறைப் பேச்சே முக்கியம்.

அதிலும் ஸ்ரீ பிரியா சொன்னது. தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். அதை சரியாக உச்சரித்தாலே போதுமானது. தமில், டமில், டாமில், என்று சொல்லாமல், உங்கள் தாயை அழைப்பது போல் அழகாக தமிழ் என்று முதலில் பேசுங்கள் என்றார். இத்தனைக்கும் அவர் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை என்றார். திரைப்பட வசனகர்த்தாக்களே தன்னை நல்ல தமிழ் பேச வைத்தார்கள் என்றார்.

இதெல்லாம் எழுதிக் கொடுத்து பேசிய பேச்சுகளாக நினைக்கலாம். ஸ்ரீ பிரியா தமிழ் நடிகை அதனால் அப்படி நினைக்க முடியவில்லை. குஷ்புவை பொருத்தவரை ஜெயா டி.வி. ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்தே அவரது தமிழை கவனித்து வருகிறேன். முடியாத இடத்தில் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார். அதனால் இந்த நிகழ்ச்சியிலும் இந்த பகுதி மட்டுமல்ல எல்லா பகுதியிலும் நல்ல தமிழே பேசுகிறார். ஏன் மற்ற நடிகை, நடிகர்கள் நல்ல தமிழ் மட்டுமல்ல தமிழே பேசுவதில்லை என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

கடைசியாக ஒன்று. அதில் பேசிய ஒரு பெண், இந்தக் காலத்திற்கு ஏற்ப ஆங்கிலம் கலந்து வசனம் வருவது இயற்கைதானே அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு ஸ்ரீ பிரியா சொன்ன பதில் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது.

இங்க பாருமா……ஊரான் புள்ளைய வளக்கறதுக்காக உன் புள்ளைய அம்மணமா விடாதே.

இது எப்படி இருக்கு?

மனதுக்கு நிறைவாக இருந்த ஒரே உருப்படியான டி.வி. நிகழ்ச்சி பூவா, தலையா.

மார்ச் 11, 2010 at 12:50 மு.பகல் மறுமொழியவும்


நல்லா சொன்னாங்க

ரகுநாதன் on கலைஞரும் தமிழுணர்வும் மானாட…
tamizhanban on கலைஞரும் தமிழுணர்வும் மானாட…
ரகுநாதன் on 13 Tzameti (french) மரண வ…
ரகுநாதன் on 13 Tzameti (french) மரண வ…
கனவுகளின் காதலன் on 13 Tzameti (french) மரண வ…

அதிகம் பேர் படித்தது

 

மார்ச் 2010
தி செ பு வி வெ ஞா
« Feb    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

வந்தவர்கள்

  • 646 பார்வை

தொகுப்புகள்

வகைகள்

விருந்தினர் போற்றுதும்

wordpress stats

Follow

Get every new post delivered to your Inbox.