Archive for ஜனவரி, 2010

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…

யார் வென்றால் என்ன
யார் தோற்றால் என்ன
யார் ஆண்டால் தான் என்ன

பொன் ஆனாலும்
ராஜா என்றாலும்
வழி பிறக்காத
வாழ்வொன்றுதான்
காத்திருக்கிறது எமக்கு

மிச்சமிருக்கும் உயிரையும்
வெந்த சோற்றுக்காய்
அல்லலுற்று
வீணாய்த்தான் போக்குவோமோ?

கேள்விகளால் நிறைகிறது
ஈழம்!

ஜனவரி 27, 2010 at 5:07 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

இலவச டி.வி.யும் அமைச்சர்களின் நையாண்டியும்

கடந்த தேர்தலின்போது கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார் கலைஞர். அதனால் ஏராளமானோர் பயன் பெற்றனர். கிலோ அரிசி அதுவும் ரேசன் அரிசியை யார் வாங்கப் போகிறார்கள் என்று கேட்டபோது என் நண்பனிடம் இருந்து வந்த பதில் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவன் வங்கியில் கடன் வாங்கி பொறியியல் படிப்பைப் படித்து முடித்தான். பிறகு நல்ல வேலையும் கிடைத்தது. பணி நிமித்தமாகத் தான் அவனைத் தெரியும். ஏன் எங்கள் வீட்டில் வாங்குகிறோமே என்றபோது தான் ரேசன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்தது. ஆனால் அதையும் கடத்துகிறார்கள் அதிகாரிகளின் ஆசியுடன் என்பது கொடூரமானது.

மற்றொரு வாக்குறுதி இலவச கலர் டி.வி. வழங்குவது. அதை ஒவ்வொரு ஊராட்சியாக வழங்கி வருகின்றனர். அதிலும் எங்களுக்கு வரவில்லை என்று கூறி பெரும்பாலான இடங்களில் சாலை மறியல், போராட்டம் என்று மக்கள் வீதிகளில் குவிகின்றனர். தமிழனின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

சில இடங்களில் நிலைமை மோசம். டி.வி. கிடைத்திருக்கும். ஆனால் டி.வி.யை பார்க்க முடியாது. காரணம் அந்த வீதியிலேயே மின்சாரம் இருக்காது. முதலில் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவையை வழங்குங்கள் அப்புறம் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொடுங்கள் என்று யாரும் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. இது ஒருபுறம் என்றால் டி.வி.யை கொடுப்பதற்கு ஏகப்பட்ட பாரபட்சம். இவன் நம்ம ஆள், நம்ம கட்சி, நம்ம மச்சான் என்று பார்த்துப் பார்த்து கொடுப்பதாகப் புகார்கள் வேறு. டி.வி. வேண்டுமானால் அதற்கு 500 ரூபாய் கொடு என்று அந்த ஏரியா கவுன்சிலரே விலை வைப்பது மற்றொரு புகார். இது இப்படி என்றால் வாங்கி வந்த டி.வி.யை அன்றைக்கே மற்றொருவருக்கு வந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு வேலை பார்க்கப் போகும் பொதுமக்கள் இன்னொருபுறம்.

நான் ஈரோட்டில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கே டி.வி. வைத்திருந்தார்கள். அதை ஓடவிட்டால் முதலில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி என்று வருகிறது. பாருங்கள் மக்களின் வரிப்பணத்தில் வந்த இலவசப் பொருள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வாங்கும் ஹோட்டலின் அறையில் தங்குவோரை மகிழ்விக்கிறது.

இந்த டி.வி.வழங்கும் நிகழ்ச்சி என்று ஒன்று நடக்கும். அதில் அமைச்சரோ, எம்எல்ஏவோ, கட்சியின் மாவட்டச் செயலரோ பேசுவார்கள். அப்போது ஒப்பிப்பார்கள் பாருங்கள் ஒரு புள்ளி விவரத்தை. தாங்கவே முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் உத்தரவின் பேரில் இது வரை இத்தனை லட்சம் டி.வி. வழங்கியிருக்கிறோம். அத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று பேசுவார்கள். சரி இது ஏதோ புள்ளிவிவரம் என்று விட்டுவிடலாம்.
ஆனால் இந்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சொல்லும் ஒரு விசயம் தான் எரிச்சலும் கோபமும் ஏற்படுத்தும். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் காந்திச் செல்வன், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் என்று யாராக இருந்தாலும் ஒரு வரி பஞ்ச் டயலாக் சொல்வார்கள். அது இதுதான். உலகச் செய்திகளை அறிந்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவும், வீட்டிலிருக்கும் பெண்களும் உலக நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கலைஞரின் இந்த இலவச கலர் டி.வி. வழங்கப்படுகிறது என்பார்கள். இதைக் கேட்டபோது ஈழத்தின் சோகத்தின் போதும் சிரிப்புதான் வந்தது. ஆனால் அதன் பின்னால் வெறுப்பும், வேதனையும் நிறைந்திருந்தது.

நம்ம ஆட்களும் இளித்துக் கொண்டு வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுவார்கள். ஏற்கெனவே டி.வி. உள்ள வீட்டில் மேலும் 2 இலவச டி.வி. சும்மா இருந்து கொண்டு இருக்கிறது.

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போதும், அங்கே மக்கள் புழுக்களைப் போலத் துடித்த போதும், உதவிக்கு ஏங்கித் தவித்தபோதும், இனப் படுகொலை உச்சத்தில் இருந்த போதும் மேற்படி டி.வி.யைப் பார்த்து யாரேனும் தெரிந்து கொண்டார்களா?

எந்த டி.வி.யில் அந்தக் கொடுமையை, போருக்குப் பின்னான அவலத்தை, முள்வேலி சித்திரவதையைக் காட்டினார்கள்? அரசின் இலவச டி.வி.யிலா? இதைப் பார்த்துதான் உலகச் செய்திகளைத் தெரிந்து கொண்டார்களா? உலகச் செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டு இலவச டி.வி.யில் சீரியல் பார்த்து எங்கள் சேனல்களை வளப்படுத்துங்கள் மக்களே என்பதற்கே இந்த இலவச டி.வி. கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர்களும் அரசும் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வீர்களா மக்களே?

ஜனவரி 25, 2010 at 5:29 பிற்பகல் 6 பின்னூட்டங்கள்

கூகு‌ள்-சீனா தகராறு!

19.01.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்

உனக்குத் தெரிந்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும், உனக்குத் தெரியாதது என்ன என்பதை அறிந்து கொள்வதுமே வாழ்வின் உண்மைத் தேடல் என்றார் சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ். அப்படிப்பட்ட நாட்டில் இன்று பரவலான தகவல் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
தகவல்களைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனின் தனியுரிமை என்ற கருத்து இன்று உலகெங்கும் உள்ள பல்வேறு அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

சீனா பொருளாதார வல்லரசாக இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் அளித்தல், ஜனநாயக, மனித உரிமைச் செயல்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது. ஆனால் அவற்றை ஒடுக்குவதில் முன்னணியில் உள்ளது. அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக அமெரிக்க இன்டர்நெட் தேடுபொறி (சர்ச் என்ஜின்) நிறுவனமான கூகு‌ள், சீனா இடையே அண்மையில் ஏற்பட்ட வணிகத் தகராறு அமைந்துள்ளது.

இன்டர்நெட் வந்த பிறகு எந்த ஒரு தகவலும் உடனுக்குடன் உலகெங்கும் பரவுகிறது. இன்டர்நெட் பயன்படுத்தத் தெரிந்த ஒருவர் செய்திகள், படங்கள், ஒலி,ஒளி படங்கள், விடியோக்கள், புள்ளி விவரங்கள், கலைக் களஞ்சியங்கள், அகராதிகள் என்று எந்த ஒரு தகவலையும் உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ளப் பயன்படுத்துவது சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி ஆகும். இதில் அமெரிக்க நிறுவனமான கூகிள்.காம் உலகில் முன்னணியில் உள்ளது. சீன மொழியில் ஒரு சர்ச் என்ஜினை கூகு‌ள் நிறுவனம் 2006-ம் ஆண்டு உருவாக்கியது. ஆனால் வழக்கம் போல் சீனா தனது தணிக்கை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தியது.

ஒரு தகவல் குறித்துத் தேடினால் அது தொடர்பான எந்தத் தகவலானாலும் கூகிள் சர்வரில் இருந்தால் அதைக் காட்டிவிடும். ஆனால் சீன மொழி சர்ச் என்ஜினில் அதற்கு ஒரு வரைமுறை வைக்கப்பட்டுள்ளது. அதாவது சில தகவல்கள், படங்கள், திரைப்பட துணுக்குகள், அரசியல், மனித உரிமை அமைப்புகள் பற்றிய தகவல் முடிவுகளை தானாகவே தணிக்கை செய்யும் வகையில் சீன கூகு‌ள் தேடுபொறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக சீனாவுக்கு உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்தும் தியானன்மன் சதுக்கப் படுகொலை அல்லது தைவானுக்குச் சுதந்திரம் அளித்தல் ஆகியவை பற்றி தகவல் அறிந்து கொள்ள விரும்பினால் அதை சீன மொழி கூகிள் தேடுபொறி வழங்காது. சீன அரசின் விதிமுறைகளின் படி கேட்கப்பட்ட தகவல் முடிவுகளை வழங்க முடியாது என்ற அறிவிப்பையே கூகிள் தரும். இந்த சட்டம் கூகிளுக்கு மட்டும் அல்ல. சீனாவில் முதலிடத்தில் உள்ள, அதாவது மொத்த தேடுபொறி பயன்பாட்டில் 61 சதவீதம் சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கூகிளின் எதிரி நிறுவனமாகக் கருதப்படும் பைடு.காம், யாகூ, மைக்ரோசாஃப்ட் பிங்க், விக்கிப்பீடியா, யூடோ, யூ டியூப்.காம், பைபை, டாவோபோ, டாம் ஆன்லைன் என்று எந்த ஒரு இணைய தளமும் சீன அரசின் கழுகுக் கண்களுக்குத் தப்ப முடியாது.

கூகு‌ள் நிறுவனமும் இந்த சட்டத்துக்கு ஒத்துக் கொண்டுதான் தனது சேவையைத் துவங்கியது. ஆனால் சுய தணிக்கை அடிப்படையில் இதற்கு மேல் தம்மால் சேவை வழங்க முடியாது என்றும் சீனாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும் அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இது தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் பணியாற்றும் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்புக்குக் காரணம், முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்க, ஐரோப்பிய, சீன மனித உரிமை ஆர்வலர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் டிசம்பர் மாதம் கண்டுபிடித்தது. அதற்கு துணை போனதாக அல்லது ஆதரவு கொடுத்ததாக சீன அரசின் மீது புகார் கூறியது. ஆனால் சீன அரசு இதை மறுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவியும், திபெத் விடுதலையை ஆதரிப்பவருமான டென்ஜின் செல்டன் என்பவரின் ஜிமெயில் கணக்கில் உள்ள தகவல்களை சீனாவிலிருந்து ஹேக்கர்கள் பார்வையிட்டதாக பகிரங்கமாக புகார் தெரிவித்த பின்பு இப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
இதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத அதன் வியாபார எதிரி பைடு.காம் அதிகாரிகள், சீன மொழியில் போட்டியிட்டு சந்தையைப் பெரிதுபடுத்த முடியவில்லை என்ற காரணத்தால் தான் கூகிள் தனது சேவையை நிறுத்துகிறதே தவிர சுய தணிக்கை போன்ற காரணங்கள் எல்லாம் இல்லை என்றனர். ஆனால் கூகிளோ, சீன மனித உரிமை ஆர்வலர்களின் ஜிமெயில் கணக்குகளை ஹேக்கர்கள் எனப்படும் தொழில்நுட்ப திருடர்கள் மூலம் சீன அரசு பார்வையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. தன்னிடமுள்ள பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளது.
கூகுளி‌ன் இந்த முடிவை அமெரிக்க அரசும், யாகூ உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூகிளின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான சீன தூதரிடமும் இது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே ஃபேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக இன்டர்நெட் தளங்களுக்கு தடை உள்ளது. இப்போது முக்கிய இணையத் தளமான கூகிள் வெளியேறுவது தங்களை உலகத்தில் இருந்து துண்டிப்பதைப் போலிருப்பதாக சீன இன்டர்நெட் பயனாளர்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே அதிக அளவாக 34 கோடி இன்டர்நெட் பயனர்களைக் கொண்ட மிகப் பெரிய சந்தையான சீனாவிலிருந்து காலி செய்யப் போகிறோம் என்று கூகிள் கூறியதால் அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பைடு.காம் பங்குகளின் விலை ஒரே நாளில் 13 சதவீதம் உயர்ந்தது. ஆனால் கூகு‌ள் பங்குகள் எதிர்பார்த்த அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. வெறும் 0.5 சதவீதம் மட்டுமே விலை குறைந்தது. இது முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அதே நேரம், சீனாவிலிருந்து கூகு‌ள் வெளியேறுவது சீனா-கூகு‌ள் இருவருக்குமே நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்று சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து வெளியேறுவதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. இது குறித்து சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று கூகிள் கூறியுள்ளது.
அரசும், அரசின் கொள்கைகளும் பரவலான கருத்துச் சுதந்திரத்துக்கும், ஜனநாயகச் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக மாறினால்தான் இன்டர்நெட் உள்ளிட்ட ஊடகங்கள் மீதான மறைமுக, நேரடித் தாக்குதல்கள் தடுக்கப்படும். அதுவரை லாபம், நஷ்டம் ஆகியவை கூகு‌ள் போன்ற நிறுவனங்களுக்கு ஏற்படலாம். ஆனால் சாதாரண குடிமக்களுக்குக் கிடைப்பது வெறும் நஷ்டம் மட்டும்தான்.

நன்றி: தினமணி

ஜனவரி 23, 2010 at 11:18 பிற்பகல் 4 பின்னூட்டங்கள்

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘ரோப்’ (Rope) – ஒரு ஸ்டேஜ் த்ரில்லர்

த்ரில்லர் சினிமா இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது சைக்கோ என்ற திரைப்படம் பார்க்காத உலக சினிமா ஆர்வலர்களும் இருக்க முடியாது. ஹிட்ச்காக் முதன்முதலில் டெக்னிகலரில் எடுத்த திரைப்படம் ரோப் (Rope). இப்படம் 1948-ல் வெளியானது. இதன் பிளாட் விவாதத்துக்கு உரியதாக இருந்தது போலவே அதன் டெக்னிக்கல் அம்சத்துக்கும் பாராட்டப்பட்டது.

இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். பேட்ரிக் ஹாமில்டன் என்பவரது நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 80 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் படம் முழுவதும் 10 ஷாட்களே உள்ளன. ஒவ்வொன்றும் குறைந்தது 4 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரையிலான நீளமான ஷாட்கள். ஒரே செட், கேரக்டர்களோட பயணிக்கும் கேமரா என்று படம் முழுக்க அமர்க்களப்படும்.

கலை கலைக்காக என்பது போல கொலை கொலைக்காக என்பதே இதன் தீம். ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்றால் அதை நிரூபிக்க கொலை செய்ய வேண்டும் என்ற நீட்ஷேவின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இப்படம். மற்றொன்று கதையி்ல் வரும் முக்கிய பாத்திரங்களின் உறவு முறை. இது விவாதத்துக்கு உரியதாக இருந்தது. அந்த இருவரும் ஒரு பாலின உறவாளர்கள். இதனால் இந்தப் படத்துக்கு அமெரிக்காவில் அப்போது அனுமதி மறுத்திருக்கிறார்கள்.

பிரான்டன் (ஜான் டால்), பிலிப் (ஃபார்லி கிரேங்கர்) இருவரும் நண்பர்கள். அவர்களது நண்பன் டேவிட் கென்ட்லி. முதல் சீனிலேயே பிரான்டனும், பிலிப்பும் சேர்ந்து ஒரு கயிற்றால் டேவிட்டின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்கிறார்கள். பிறகு அவன் இறந்ததை உறுதி செய்துவிட்டு ஒரு பெரிய மரப்பெட்டியில் பிணத்தைப் போட்டு மூடுகிறார்கள். இதற்குப் பின்னர் பிரான்டன் தைரியமாக இருந்தாலும் பிலிப் ஏனோ பதற்றத்திலும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்திலும் இருக்கிறான். அவனுக்குத் தைரியம் சொல்கிறான் பிரான்டன்.

அன்று நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு இவர்களின் ஆசிரியர் ரூபர்ட் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), டேவிட்டின் தந்தை, அத்தை, டேவிட்டின் காதலி ஜேனட், ஜேனட்டின் முன்னாள் காதலன் கென்னத், வீட்டு வேலைக்காரி கலந்து கொள்ள வருகிறார்கள்.

பெட்டி இருக்கிறது. பெட்டிக்குள் டேவிட் பிணமாகக் கிடக்கிறான். என்ன செய்வது என்று கேட்கிறான் பிலிப். அந்தப் பெட்டியை ஒரு துணியைப் போட்டு முடி அதன் மேல் மெழுகுவர்த்தி ஸ்டேன்ட், உணவுத் தட்டுகளை வைத்துவிடலாம் என்கிறான் பிரான்டன். அவன் செய்த கொலையை ஒரு கலை என்றே உணர்கிறான் பிரான்டன். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது. அப்போதுதான் பெட்டியின் வெளியே டேவிட் கழுத்தில் சுற்றி இருக்கும் கயிறு வெளியே தொங்குவது தெரிகிறது. பிரான்டனை அழைக்கிறான் பிலிப். நீயே காட்டிக் கொடுத்துவிடுவாய் போலிருக்கிறது என்று கடிந்து கொண்டு கயிறை வெளியே எடுக்கிறான் . அதாவது அவர்களாகவே கண்டுபிடிக்கட்டும் என்கிறான். வந்திருப்பது கென்னத். அவனை வரவேற்று மது அளிக்கிறார்கள். ஜேனட்டும் வருவதாக அவனிடம் சொல்கிறான் பிரான்டன்.

பிறகு ஒவ்வொருவராக வந்து சேர பார்ட்டி துவங்குகிறது. ஆனால் டேவிட்டை மட்டும் காணவில்லை. எல்லோருக்கும் சந்தேகமாக இருக்கிறது. டேவிட் இவ்வாறு பார்ட்டிக்கு நேரம் கழித்து வருபவனும் அல்ல. வீட்டிலும் தகவல் சொல்லவில்லை என்கிறார் டேவிட்டின் அப்பா. நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் பிரான்டனின் ஆசிரியர் ரூபர்ட் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்) சந்தேகம் அடைகிறார். தான் செய்த தவறை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ஓவர் ஸ்மார்ட்டாக நடந்து கொள்கிறான் பிரான்டன். ஆனால் பிலிப்பால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஒயின் கிளாஸை கையால் அழுத்தி உடைத்து காயப்படுத்திக் கொள்கிறான்.

அப்போது அவர்களுக்குள் ஒரு விவாதம் வருகிறது. தாழ்ந்த மக்களை உயர்ந்த மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறான் பிரான்டன். தாழ்ந்த மக்களுக்கு (inferior) உயர்ந்தவர்களே (superior) வழி காட்ட வேண்டும். அவர்களுக்கு நாம் தேவை என்கிறான். தாழ்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கிறான். யார் அதைச் செய்ய உரிமை கொண்டவர்கள் என்று கேட்கிறார் டேவிட்டின் அப்பா. யார் வேண்டுமானாலும் நான், பிலிப், கென்னத் என்று யார் வேண்டுமானாலும் கொல்லலாம் என்கிறான். இது ஹிட்லரின் மனப்போக்கைப் போலிருக்கிறது என்கிறார் டேவிட்டின் அப்பா. ஹிட்லர் உணர்ச்சிவசப்பட்டு செய்தார். ஆனால் நான் சொல்வது அறிவுக் கூர்மையுடன் கொலை செய்வது என்று மறுக்கிறான் பிரான்டன். இதில் கோபமடையும் டேவிட்டின் அப்பா, மகனைக் காணவில்லை என்று கூறி வீட்டுக்கு அவசரமாகக் கிளம்புகிறார். போகும்போது அவருக்குப் பரிசாக சில புத்தகங்களைக் கொடுக்கிறான் பிரான்டன். அந்தப் புத்தகத்தைச் சேர்த்துக் கட்டியிருக்கும் கயிறு அவரது மகனைக் கொலை செய்யப் பயன்படுத்திய கயிறு என்பதை பிலிப் கவனிக்கிறான். அதை ரூபர்ட்டும் கவனிக்கிறார்.

டேவிட்டுக்கு பார்ட்டி நடக்கும் செய்தியையே நீ சொல்லவில்லை என்று பிரான்டனைத் திட்டிவிட்டுச் செல்கிறாள் ஜேனட். கென்னத்தும் உடன் செல்கிறான். இப்போது ரூபர்ட், வேலைக்காரி மட்டுமே இருக்கிறார்கள். பேசிக் கொண்டே வந்து டேவிட் கிடக்கும் பெட்டியின் மேல் இருக்கும் மெழுகுவர்த்திகளை அணைத்துவிட்டு எடுக்கிறாள் வேலைக்காரி. அதன் மேல் இருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு துணியையும் எடுக்கிறாள். இப்போது பிரான்டன், பிலிப், ரூபர்ட், வேலைக்காரி எல்லோரும் அங்கே நிற்கிறார்கள். எதேச்சையாக வேலைக்காரி பெட்டியைத் திறக்கும் போது பிரான்டன் அவளை வேறு வேலை பார்க்கச் சொல்கிறான். இதுவும் ரூபர்டுக்கு சந்தேகம் தருகிறது.

விவாதத்தின்போது கோழியின் கழுத்தை பிலிப் நன்றாக இறுக்குவான் என்று சொல்கிறான் பிரான்டன். இல்லை என்று கடுமையாக மறுக்கிறான் பிலிப். நான் ஒருபோதும் கோழியை கழுத்தை நெரித்துக் கொன்றதில்லை என்கிறான். ஆனால் பண்ணையில் அவ்வாறு அவன் செய்ததைக் கவனித்துள்ளதாக ரூபர்ட் கூறுகிறார். இதனால் கோபமடைகிறான் பிலிப்.

பார்ட்டி முடிந்து கிளம்பும்போது தனது தொப்பியை எடுக்கச் சொல்கிறார். வேலைக்காரி தொப்பியைத் தருகிறாள். ஆனால் அது வேறு தொப்பி. இது என்னோடதல்ல என்று சொல்லி அவருடைய தொப்பியை எடுக்கச் சொல்கிறார். அந்தத் தொப்பியின் உள்ளே டி.கே. என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆக, டேவிட் இங்கேதான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ரூபர்ட். வெளியே செல்கிறார். தனது சிகரெட் பெட்டியை மறந்துவிட்டதாகக் கூறி திரும்ப வருகிறார். யாருக்கும் தெரியாமல் பெட்டியின் மேல் அவரே அதை வைத்துவிட்டு, இதோ இங்கே இருக்கிறது என்கிறார். அப்போது திடீரென பெட்டியைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

நீங்கள் இந்தக் கலையைப் பாராட்டுவீர்கள் என்று நினைத்தோம் என்று ரூபர்ட்டிடம் பிரான்டன் கூறுகிறான். ஆனால் “உங்களுக்குப் போதித்த தத்துவத்தை என்னிடம் பிராக்டிகலாகக் காட்டுகிறீர்கள். அவனை தாழ்ந்தவன் என்று கூறவும், அவனைக் கொல்லவும் நீ என்ன கடவுளா, யார் உனக்கு உரிமை கொடுத்தது” என்று ஆக்ரோசமாகக் கேட்கிறார் ரூபர்ட். செய்வதறியாது நிற்கும் பிரான்டன் பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை எடுக்கிறான். பிறகு அதை டேபிளில் வைக்கிறான். உடனே அதை எடுத்துக் கொள்கிறார் ரூபர்ட்.

நீங்கள் செய்தத் தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி சன்னலைத் திறந்து வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு அமைதியாக உட்காருகிறார். அப்போதும் பிரான்டன் ஒரு பெக் பிராண்டி குடிக்கிறான். வெளியே மக்கள் என்ன சத்தம் என்று பேசிக் கொள்கிறார்கள். அமைதியான அந்த கடைசிக் காட்சியில் போலீஸ் வருவதற்கான அறிகுறியாக தூரத்தில் இருந்து சைரன் சத்தம் மெல்ல மெல்ல அவர்களது அப்பார்ட்மென்ட் நோக்கி வருகிறது. திரை இருள்கிறது.

பிரான்டனுக்கு அடிபணிபவனாக நடித்திருக்கிறான் பிலிப். அவர்களுக்குள் ஓரின உறவு உள்ளது என்பதை எந்த விளக்கமும் காட்சியும் இல்லாமல் அவர்களது முக பாவனையிலேயே காட்டியிருக்கிறார் ஹிட்ச்காக்.

சைக்கோ போன்ற பிரமாதமான த்ரில்லராக இல்லாவிட்டாலும், வெறும் வசனங்களிலேயே த்ரில்லிங்கை கொடுக்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்தின் டிரைலர் இங்கே

ஜனவரி 22, 2010 at 3:32 பிற்பகல் 8 பின்னூட்டங்கள்

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்…


கலைஞரின் தமிழுணர்வு கண்டுதான் அவர் மீது ஒரு பற்று எனக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் (அதாங்க சின்ன பையனா இருந்தப்போ….இப்பவும் சின்னப் பையதான்…ஆனா கொஞ்சம் பெரிய சின்னப் பையன்) எம்ஜிஆர் மீது தான் ஆர்வம் அதிகம். காரணம் சினிமா. அதில் வரும் வாள் சண்டை. அதனால் எம்ஜிஆர் மீது ஒரு இது. எது? அதாங்க ஒரு பாசம், நேசம். அப்புறம் கொஞ்சம் புத்தி வந்த பிறகு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்புறம் தமிழுணர்வு ஊற்றெடுக்க ஆரம்பித்து அது தமிழிலக்கியம் படிப்பது வரை கொண்டு சென்று விட்டது. அதை விடுங்க.

சமீபத்தில் இப்போதைய தலைமுறைக்கு தமிழுணர்வு இல்லை என்று ஒரு திருமணத்தில் கலைஞர் பேசியிருக்கிறார். இன்று தமிழ் பெயர் யாரும் வைப்பதில்லை. முந்தைய தலைமுறையினரின் தமிழுணர்வை பேரன், பேத்திகள் எங்கேயோ தள்ளிவிட்டனர் என்று வேதனைப்பட்டிருக்கிறார். உண்மைதான்.

கலைஞரின் தமிழ் விளையாட்டால் கவரபட்டவன் நான். அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் கூட்டணி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. இவர் எதிர்க்கட்சி. அதிமுக ஆசிரியர்களைக் கண்டு கொள்ளவில்லை. அதை ஒரு நிருபர் கேள்வியாக எழுப்புகிறார். ஆசிரியர் ஸ்டிரைக்கை அரசு கண்டுகொள்ளவில்லையே? என்று கேட்கிறார். அதற்கு கலைஞரின் பதில் ஒரு வேளை ஆ-சிறியர் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.

முன்பு சேடிலைட் டி.வி. கிடையாது. புத்தகங்களும், சினிமாக்களும் மட்டுமே பொழுதுபோக்கு. அப்போது தமிழுணர்வு சாகாமல், தழைத்துக் கிடந்தது. அதுவும் புத்தகங்கள் மற்றும் திராவிட இயக்கப் பேச்சாளர்களால். இன்று நிலைமையே வேறு. எந்த டி.வி.யை பார்த்தாலும் தங்கிலீசில்தான் தொகுப்பாளர்கள் பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் அங்கு நேருக்கு நேர் நிகழ்ச்சிகளில் கூட பொதுமக்கள் தமிங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். அப்புறம் தமிழுணர்வு எப்படி வரும்? இதில் விதிவிலக்கு மக்கள் டி.வி. மட்டுமே.


சன் டி.வி.யை விட்டுத் தள்ளுவோம். கலைஞர் டி.வி.யில் தமிழுணர்வை அமல்படுத்தலாமே. ஏன் செய்வதில்லை.? மானாட மயிலாட என்ற மானங்கெட்ட ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதில் நமீதா எல்லோரையும் மச்சான்ஸ் என்கிறார். டமிலில் பேசுகிறார். “உங்க ரெண்டு பேர்க்கு எடில கெமிஸ்ட்ரி நல்லாலே” என்கிறார். கெமிஸ்ட்ரி நல்லா இருந்தா பத்திக்காதா?. அதாவது அந்த சின்னத் திரை நடிகைகளின் பின்பக்க ஆட்டமும், முன்பக்க ஆட்டுதலும் சரியில்லை என்பதை நாசூக்காக கூறுகிறார்கள். விரசத்தின் உச்சமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை குடும்பமே உட்கார்ந்து சப்புக் கொட்டிப் பார்க்கிறது.

நான் சென்னையில் ஒரு நண்பரின் வீட்டிற்கு போயிருந்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் மனைவி டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று “பாவம் அவன், பாவம் அவள்” என்று இரண்டு பெயரைச் சொன்னார். பிறகு அழாத குறையாகப் பேசினார். அப்புறம் தான் தெரிந்தது அது விஜய் டி.வி.யில் வந்த ஜோடி நெ.1 என்ற நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டவர்கள் தோல்வியைத் தாங்காமல் அழும் காட்சி என்று.



கலைஞர் டி.வி.யிலேயே இப்படின்னா நாங்க என்ன இளிச்சவாயன்களா என்று சன் டி.வி. நினைத்ததோ என்னவோ…ராணி 6 ராஜா யாரு என்று ஒரு நிகழ்ச்சி உடனே வந்தது. அதாவது 6 நடிகைகள் குத்தாட்டம் போடுவார்கள். அல்லது 6 குத்தாட்ட நடிகைகள் ஆட்டம் போடுவார்கள். அதைப் பார்த்தால் கலைஞர் தோற்றுவிடுவார். அந்த அளவுக்கு ஆபாசத்தின் உச்சமோ உச்சம். கேமரா கோணம் எல்லாம் இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழே, பின்புறம் குளோஸ் அப் இப்படியே அந்தப் பாட்டு முழுவதும் செல்லும்.

இதில் அதிர்ச்சி அடைய வைத்த ஒரு ஆட்டம். சம்மு என்றொரு நடிகை இருக்கிறார். (அவர் எதில் நடித்தார் என்பதை யாராவது சொல்லுங்கள்). அவர் ஆட்டம் போட வரும் முன் அவரைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு ஒளிபரப்பினார்கள். (பெரிய தியாகி பாருங்க…அதனால் டாகுமென்ட்ரி வேற….ங்கொய்யால…) அப்புறம் ஆடினார். ஜீன்ஸ், மேலே பிரா போல ஒரு உடை. இடுப்பை மறைக்க ஒரு மெல்லிய துண்டு போல ஒன்று. கேமரா சுத்தோ சுத்துன்னு சுத்தி இடுப்பு, மார்பு, குண்டி (வேறென்ன சொல்றது) இதைத் தான் காட்டுது. தனியாக இருந்தால் ரசித்துப் பார்க்கலாம். வீட்டில் அம்மா, அப்பா, சகோதரி எல்லாரும் இருக்கிறார்கள். எப்படி அதைப் பார்ப்பது? அப்புறம் திடீரென்று நிறுத்தினார். இடுப்பில் இருந்த துண்டை ஒரு கவர்ச்சி நடிகை அவிழ்ப்பது போல அவிழ்த்தார். பிறகு உரித்த கோழி போல இடுப்பை மட்டும் கேமிரா ஃபோகஸ் செய்தது. ஆகாகாகாஹா….. ஹிப் டான்ஸாம் அதுக்குப் பேரு. அய்யோ தாங்கலடா சாமி…..

அப்புறம் டான்ஸ் முடிந்த பிறகு அவரது நண்பர்கள், மாஸ்டர், தங்கை பேசினார்கள். இவ எப்பவும் ஆடிட்டே இருப்பா…ஐலவ்யூ செல்லம் என்று பறக்கும் முத்தம் வேறு…. அப்புறம்தான் அதிர்ச்சியே…அவளோட அப்பாவும் அங்கேதான் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார். அடக் கருமமே….இதில் அவர் பெருமை பொங்கப் பேசுகிறார் தன் மகளின் காமக் களியாட்டத்தைப் பற்றி. நல்ல அப்பன்…நல்ல மகள்….

AXN டிவியில் ஒரு நிகழ்ச்சி வரும். so you think you can dance? என்ற நிகழ்ச்சி. அதில் மொத்தமே 2 நிமிடம் தான் ஆடுவார்கள். அவர்கள் உடை மேற்கத்திய உடைதான். ஆனால் ஆட்டத்தில் ஒரு சின்ன ஆபாசம் கூடத் தெரியாது. அதைப் பார்த்துதானே இவர்கள் இதைக் காப்பி அடித்து எடுக்கிறார்கள். பிறகு எதற்கு இவ்வளவு ஆபாசம்.?

விசயத்துக்கு வருவோம். இப்படி24 மணி நேரமும் டி.வி.களில் ராஜா 6 ராணி யாரு? மானாட மயிலாட என்றிருந்தால் இருக்கும் கொஞ்சம் தமிழுணர்வும் பறந்து விடும். அப்புறம் எப்படி தமிழுணர்வு வரும் இந்தத் தலைமுறைக்கு?

ஜனவரி 19, 2010 at 4:24 பிற்பகல் 11 பின்னூட்டங்கள்

Older Posts


நல்லா சொன்னாங்க

ரகுநாதன் on கலைஞரும் தமிழுணர்வும் மானாட…
tamizhanban on கலைஞரும் தமிழுணர்வும் மானாட…
ரகுநாதன் on 13 Tzameti (french) மரண வ…
ரகுநாதன் on 13 Tzameti (french) மரண வ…
கனவுகளின் காதலன் on 13 Tzameti (french) மரண வ…

அதிகம் பேர் படித்தது

 

ஜனவரி 2010
தி செ பு வி வெ ஞா
« நவ   Feb »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

வந்தவர்கள்

  • 646 பார்வை

தொகுப்புகள்

வகைகள்

விருந்தினர் போற்றுதும்

wordpress stats

Follow

Get every new post delivered to your Inbox.